மும்பை, ஜூலை 15 மகாராட்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராட்டிரத்தைச் சேர்ந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய், கடந்த மே மாதம் பதவி யேற்றார்.
இந்த நிலையில், இந்திய நீதித் துறையின் மிக உயர்ந்த பதவியை அடைந்து மகாராட்டிரத்தை பெருமைப்படுத்தியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படவிருப்பதாக மகா ராட்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் அறிவித்துள்ளார்.
வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மத்திய அரங்கில் பாராட்டு விழா நடைபெறும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது.
கவாய்க்கு அவமதிப்பு!
மும்பை தாதரில் மகாராட்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, பதவியேற்ற சில நாள்களில் வருகை தந்திருந்த பி.ஆர். கவாய்யை வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்த கவாய், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
உடல் பருமனுக்கு ஆபத்தான உணவு சமோசா, ஜிலேபி
புதுடில்லி, ஜூலை 15 உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து ஒன்றிய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட் களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பல கைகள் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்புப் பலகையில் நாம் அன்றாடம் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல் இடம்பெறவுள்ளது. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகள் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது.
சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெறும் என்று இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் ஆம்லே தெரிவித்தார்.