உலகின் அதிவேக இன்டர்நெட் ஜப்பானின் சாதனை
புதுடில்லி, ஜூலை 13– உலகின் அதிவேக இன்டர்நெட்டை ஜப்பான் அறிமுகம் செய்து வைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்பிலிக்ஸ் படங்களையும் டவுன்லோடு செய்து விட முடியும். இன்டர்நெட் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை தகர்த்தெறிந்து தகவல் பரிமாற்ற வேகத்தில் புதிய உலக சாதனையை ஜப்பான் படைத்துள்ளது.
அதாவது, ஒரு நொடியில் 1.02 பெட்டாபைட்ஸ் இன்டர்நெட் வேகத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மய்யம் (என்அய்சிடி) அறிவித்துள்ளது. இதன் மூலம் நெட்பிலிக்சிடம் உள்ள அத்தனை படங்களையும் ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஒரே நொடியில் பதிவிறக்கலாம். இந்தியாவில் தற்போது அதிகபட்ச இன்டர்நெட் வேகம் 63.55 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதை விட ஜப்பானின் இன்டர்நெட் வேகம் 1.6 கோடி மடங்கு அதிகம். அமெரிக்காவின் இன்டர்நெட் வேகத்தை விட 35 லட்சம் மடங்கு அதிகம். இந்த அதிவேக இன்டர்நெட்காக சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் அய்ரோப்பிய ஆய்வாளர்களுடன் இணைந்து பிரத்யேக பைபர் கேபிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள் வழியாக ஒரே நொடியில் தரவுகளை 1,808 கிமீ தூரத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அதிவேக இன்டர்நெட் எதிர்கால ஏஅய் தொழில்நுட்பத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.