காசாவை, பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது இஸ்ரேல் அய்.நா. தலைவர் குற்றச்சாட்டு

viduthalai

காசா, ஜூலை 13– இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான அய்.நா. அமைப்பின் தலை வர் பிலிப் லசரினி தெரி வித்துள்ளார்.

காசாவில், இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காசாவில் பசிக் கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்றும் கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மய்யங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித் துள்ளது.

இதில் 615 பேர் இஸ்ரேல் மற்றும் அமெ ரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மய்யத்தில் கொல்லப்பட்டனர். பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி இஸ்ரேல் காசாவில் இனப் படுகொலை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அய்.நா. உலக உணவுத் திட்டத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், காசாவில் சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட் டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.

இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரி வித்தனர்.

குறிப்பாக மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பலாவில் நேற்று (12.7.2025) இரவு தொடங்கி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று அல்-அக்ஸா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 15 பேர் இறந்ததாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காசா சுகாதார அமைச் சகத்தின் கூற்றுப்படி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 57,762 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *