புதுடில்லி, ஜூலை 12 ‘75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்’ என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மறைந்த மோரோபந்த் பிங்களே குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராட்டிராவின் நாக்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், ‘உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.
மிகவும் நகைச்சுவையுடன் பேசக்கூடிய மோரோபந்த் பிங்களே ஒருமுறை பேசும்போது, 75 வயதுக்குப் பிறகு உங்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டால் அதற்கு, நீங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள். எனவே மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என கூறினார். தேச சேவையில் அர்ப்பணிப்புடன் செயல் பட்ட போதிலும், 75 வயது ஆகிவிட்டால் அந்தப் பொறுப் பில் இருந்து விருப்பத்தோடு விலகிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்’ என்று பேசினார்.
காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ்
மோகன் பகவத்தின் இந்த உரையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘விருதுகளைத் தேடும் ஏழை பிரதமருக்கு இது எப்படிப்பட்ட ஒரு செய்தி. பிரதமர் மோடி நாடு திரும்பியதும், வரும் செப்டம்பர் 17 அன்று அவருக்கு 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவூட்டி உள்ளார். ஆனால் பிரதமர் பதிலுக்கு அவரிடம், அவருக்கும் வரும் செப்டம்பர் 11 அன்று 75 வயதாகிறது என்று சொல்லலாம். ஒரு அம்பு, இரண்டு இலக்குகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா கூறியது என்ன?
பாஜவில் ஓய்வு பெறு வதற்கென குறிப்பிட்ட வயது எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா 2023ல் கூறி இருந்தார். மேலும், ‘மோடி 2029 வரை வழிநடத்துவார். அவர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதில் எந்த உண் மையும் இல்லை’ என தெரி வித்திருந்தார்.
காங்கிரஸின் ஊடகத் தலைவர்
காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பகவத் 75 வயதை எட்டுகிறார், செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி 75 வயதை எட்டுகிறார் என்பது ஒரு நல்ல செய்தி. கடந்த 11 ஆண்டுகளாக, நாடு, அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு நிறுவனங் களின் நிலைமை இப்படித்தான் மாறிவிட்டது. இப்போது செப்டம்பர் 17 ஆம் தேதி அதிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் மகிழ்ச்சியாக இருங்கள். மோடியும், மோகன் பகவத்தும் போகப் போவதால் இந்தியாவிற்கும் அதன் அரசமைப்பு சட்டத்திற்கு நல்ல நாட்கள் வரப் போகின்றன’ என்று அவர் கூறினார்.
‘அத்வானி, ஜோஷிக்கு ஓய்வு உங்களுக்கு எப்போது மோடி?’
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறுகையில்,’ அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங், குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் உள்ளிட்டோர் 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா என்று பார்ப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.