மலையாளத்தில் வெளியான “ஸ்தானார்த்தி சிறீகுட்டன்” என்ற படத்தின் எதிரொலியாக, பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி பெஞ்ச் என்பது இல்லாத வகையில் அரைவட்ட வடிவில் மாணவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்.
பள்ளித் தேர்தல்
படத்தை இயக்கியவர் வினேஷ் விஸ்வநாத். படம் “ஸ்தானார்த்தி சிறீகுட்டன்”. இந்தப் படத்தில் கிராமப்புற கேரளாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளித் தேர்தலை மய்யமாகக் கொண்டு படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்களிடையே நடக்கும் சண்டைகள், நட்புறவின் எளிய மகிழ்ச்சிகள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் மோதல் தருணங்கள் ஆகியவை நுணுக்கமான பார்வையுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இருக்கை முறை மாற்றம் ஏன்?
வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவர். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் இருப்பது வாடிக்கை.
இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை இந்தப் படம் வலியுறுத்தியது அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும்.
படம் வெளியான நிலையில், மாணவர்களின் இருக்கை முறை தொடர்பான அதன் கருத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதன்படி இதுவரை கேரளாவில் 6 பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடைசி பெஞ்ச் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது: கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் இந்த வகுப்பறை உட்கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. குறைந்தது 6 பள்ளிகள் ஏற்கெனவே இதை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் அவர்கள் எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்தபோது நாங்கள் அதைப் பற்றி அறிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
திரைப்படத்தின் தாக்கம்
கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்விவி மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய மாற்றத்தை அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது, புதியது இல்லை.
கடந்த 1994ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 6 மாநிலங்களில் ஆரம்பக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல் செய்ய அறிவுறுத்தியது. எனினும் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் எவரும் முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளப் பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.