திருத்தணி, ஜூலை 11 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் ஊராட்சியில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் அவர்கள் அப்பகுதியில் இரவு முழுவதும் தங்கி அவர்கள் எழுப்பிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அதிகாலையில் எழுந்து துறை சார்ந்த அதிகாரிகளை வரவழைத்து குடிநீர்,மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்திடுமாறு தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக பணியினை துவங்கி மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதிகள் (அளவைகள் அளந்து மதிப்பீடு போடப்பட்டுள்ளது) இச்செயலால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
தனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக பணியினை துவங்கி முடித்துக் கொடுத்த துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
சட்டக்கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 25 வரை நீடிப்பு
சென்னை, ஜூலை 11 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புகளுக்கான விண்ணப்பக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, விண்ணப்பிக்க விரும்பினால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tndalu.ac.in இல் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
ஜி-மெயிலில் புதிய வசதி கூகுள் நிறுவனம் அறிமுகம்
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 11 இ––-மெயில் எனப்படும் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே, இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ- மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் இ-மெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் ஜி-மெயில் தான் இதில் முதலிடம் வகிக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜி-மெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஜி-மெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய வசதியின் கீழ் கொண்டு வர ஜி-மெயில் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்பாக்ஸ்களில் தேவையின்றி குவிந்து இருக்கும் மெசேஜ்களை பில்டர் செய்து தேவையான மெயில்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜி-மெயில் பயன்படுத்துவர்கள் மத்தியில் இந்த வசதி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ரூ.36,900 ஊதியத்தில் அரசுப் பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ரூ.36,900- ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.