மும்பை, ஜூலை 11 மனைவி ‘பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கணவர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக, அவர்களது குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மரபணு சோதனை
மஹாராட்டிராவைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2011இல் திருமணம் செய்து, மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறி, 2013இல் பிரிந்து விட்டார். அப்போது, அவரது மனைவி மூன்று மாத பேறு காலத்தில் இருந்தார்.
குழந்தை பிறந்ததும், அதற்கு தந்தை தான் அல்ல எனவும், பாலியல் தொழிலில் மனைவி ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்த, குழந்தைக்கு டி.என்.ஏ., சோதனை எனப்படும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது, அந்த குழந்தை, 12 வயது சிறுவனாக வளர்ந்து விட்டான். இந்நிலையில், சிறுவனின் தந்தைவழி உறவை தீர்மானிப்பதற்கு, டி.என்.ஏ., பரிசோதனை நடத்தலாம் என, குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அந்த பெண் மற்றும் 12 வயது சிறுவன் சார்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில், கடந்த 2020இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது, குழந்தையின் நலனை கருத்தில் கொள்வது குடும்பநல நீதிமன்றத்தின் முக்கிய கடமை. பெற்றோர் ஒருவருக்கொருவர் சண்டையிடும் போது குழந்தையை கருவியாக பயன்படுத்தினால், குழந்தைகளின் உரிமைகளை நீதிமன்றங்கள் தான் பாதுகாக்க வேண்டும்.
பரிசோதனையை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ முடிவெடுக்கும் திறன்கூட இல்லாதபோது, 18 வயது நிரம்பாத குழந்தையை ரத்தப் பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, மைனர் குழந்தையை டி.என்.ஏ., அல்லது ரத்த பரிசோத னைக்கு உட்படுத்தும் முன், நன்மை, தீமைகளை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆண், தன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகித்து, மண விலக்கு பெற தகுதி உடையவராக இருந்தாலும் கூட, அவரது மைனர் குழந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. மனைவி மீதான பாலியல் குற்றச் சாட்டுக்கு, குழந்தையின் டி.என்.ஏ., சோதனைக்கு பதில், வேறு வகை யான ஆதாரத்தின் வாயிலாக நிரூபிக்கலாம். சில, அசாதாரண வழக்குகளில் டி.என்.ஏ., பரிசோதனை அவசியமாக இருக்கலாம். ஆனால், இந்த வழக்கு, டி.என்.ஏ., சோதனைக்கு உத்தரவிடுவதற்கு ஏற்ற வழக்கே இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.