சிங்கப்பூர், ஜூலை 10- பொம்மைகள் வெறும் விளையாட்டிற்கானது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு நோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும் வகையில்,
டைப் 1 நீரிழிவு நோயுடன் கூடிய புதிய பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்க்கரை அளவைச் சரிபார்க்கும் கருவியுடன் இந்த பொம்மை வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக, டைப் 1 சர்க்கரை நோய் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. நொறுக்குத்தீனிகள், செயற்கை சுவையூட்டிகள், வண்ணப் பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் சரியான நேரத்தில் உணவு உண்ணாதது போன்ற காரணங்களால் இந்நோய் குழந்தைகளைத் தாக்குகிறது.
இந்த நோய் குறித்த விழிப்புணர்வையும், அதன் பாதிப்புகளையும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் நோக்குடன் மேட்டல் நிறுவனம் இந்த பார்பி பொம்மையை வெளியிட்டுள்ளது. “நோய்கள் பற்றிய குழந்தைகளின் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு பார்பி பொம்மைகள் உதவுகின்றன,” என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். மருத்துவப் பிரச்சனைகளுடன் கூடிய பார்பி பொம்மைகளை அறிமுகப்படுத்து வதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்கள் குறித்து புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டைப் 1 நீரிழிவு நோய் என்பது, உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களை நோய் எதிர்ப்பு மண்டலமே தாக்கி அழிக்கும் ஒரு நிலை. இது பெரும்பாலும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதிய பார்பி பொம்மையின் கையில், ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க உதவும். தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர் (CGM) கருவியும் இடம்பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. இது குழந்தைகளுக்கு நோய் மேலாண்மை குறித்த புரிதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.