புதுடில்லி, ஜூலை 9 நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியும் மற்ற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கைப்பேசி செயலி மூலம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் தகவல் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் தரவுகளை சேகரிக்க தங்கள் சொந்த கைப்பேசியை பயன்படுத்துவார்கள். அதேநேரம் பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை தாங்களே பதிவு செய்ய ஏதுவாக ஒரு இணையதளம் தொடங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
அம்பேத்கர் குறித்து
இழிவாக பேசியவரின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
சென்னை, ஜூலை.9- விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மேனாள் மாநில துணைத்தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர். பி.வி.எஸ்.மணியன், சென்னை தியாகராயநகரில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் செல்வம் மாம்பலம் காவல்துறையில் புகார் செய்தார். இதன்படி, மணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மணியன், சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மணியனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றச்சாட்டு பதிவுக்காக வருகிற 21-ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.