அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற மருத்துவர்களை இணை பேராசிரியர்களாக நியமிக்கலாம் தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை.7-அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர் அல்லாத நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை இனி இணை பேராசிரியர்க ளாக நியமிக்கும் வகை யில் தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவ பேராசிரியர் விதிகளில் தளர்வு ஏற்படுத்தி உள்ளது.

75 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்கள்

இந்திய சுகாதார கட்ட மைப்பு மிகப்பெரிய அளவில் உருமாற்றம் பெற்று வருகிறது. இதில் முக்கியமாக அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவக்கல்வி இடங்களை உருவாக்க ஒன்றிய அரசு இலக்கு வைத்திருக்கிறது.

இவ்வாறு அதிகரிக்கும் மருத்துவக்கல்வி இடங்க ளுக்காக ஆசிரியர்களும் அதிக அளவில் தேவைப் படுகின்றனர்.

எனவே தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் வசதிகளை அதிகரிக்கும் வகையில் தேசிய மருத்துவ கவுன்சிலின் கீழ் உள்ள மருத்துவ உயர்கல்வி வாரி யம் மருத்துவ பேராசிரி யர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதில் முக்கியமாக 220 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் கொண்ட முதுநிலை மருத்துவ டிகிரி கொண்ட ஆசிரியர் அல்லாத நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை இனி இணை பேராசிரியர்களாக நியமிக்கலாம்.

இதைப்போல 2 ஆண்டு அனுபவம் கொண்ட மேற்படி வல்லுனர்களை துணை பேராசிரியர்களாக நியமிக் கலாம். அதேநேரம் இவர்கள் நியமனம் பெற்ற 2 ஆண்டுக்குள் உயிரி மருத்துவ (பயோ மெடிக்கல்) ஆராய்ச்சியில் அடிப்படை படிப்பை முடிக்க வேண்டும்.

6 ஆண்டு அனுபவம்

இதைப்போல முதுகலை மருத்துவப் படிப்புகளை இப்போது இரண்டு ஆசிரியர் மற்றும் இரண்டு கல்வி இடங்களுடன் தொடங்கலாம்.

என்.பி.இ.எம்.எஸ். அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவ நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ள மூத்த மருத்துவர்கள் . பேராசிரியர் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

ஒரு அரசு மருத்துவ நிறுவனம் அல்லது ஒரு என்.பி.இ.எம்.எஸ். அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவுடன் 6 ஆண்டுகள் சிறப்பு நிபுணர் அல்லது மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களும் இணை பேராசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

இளநிலை, முதுநிலை படிப்புகள்

தேசிய மருத்துவ கவுன்சில் அல்லது ஒரு பல்கலைக்கழகம் அல்லது மாநில மருத்துவ கவுன்சில் அல்லது மருத்துவக் கல்வித்துறை அல்லது மருத்துவ ஆய்வு சார்ந்த அரசு நிறுவனங்களில் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியிருந்தால் அதுவும் கற்பித்தல் அனுபவமாக ஏற்கப்படும்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களை அதிக அளவில் உருவாக் குவதற்காக இனி புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒரே நேரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்து வப்படிப்புகளை தொடங்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு விதிமுறைகளை தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *