வாசிங்டன், ஜூலை 6 –அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அந்நிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்து விடுமாறு அமெரிக்கா கோரி வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்யவேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்பட வில்லை என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருந்தார்.
இருநாடுகளும் பயன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம்என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவில், ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். எனது வார்த்தைகளை கவனியுங்கள். “ட்ரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார்” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.