சென்னை, ஜூலை.5- இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கையில் 18 சதவீத பங்க ளிப்பை வழங்கி தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
நாட்டில் அன்னிய நேரடி முதலீ டுகள், ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங் களாக அறிவிக்கப்படும் பகுதிகள் பிற பகுதிகளை விட தாராளமயமாக்கப் பட்ட பொருளாதார விதிகளை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த பகுதிகளில் நவீன உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற வசதிகள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்படும். வரிச் சலுகைகள், சுங்க வரி விலக்குகள் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும்.
தமிழ்நாடு முன்னிலை
இதன்படி, இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 280 இடங்களில் செயல்பாட்டில் உள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 51 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன.
அதாவது, இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை காட்டுகிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பொருளாதார மண்டலங்களில், தமிழ்நாட்டில் உள்ள எண்ணிக்கையின் அளவை ஒப்பிடுகையில், 18.5 சதவீதத்தை கொண்டிருக்கிறது.
இந்த மண்டலங்களில் 650-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 560– க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், 1300-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் இருக்கின்றன. இதன் வாயிலாக சுமார் 6½லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேலும் 4 புதிய மண்டலங்களை தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பிற மாநிலங்களின் பட்டியல்…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து அதற்கடுத்தபடியாக, மராட்டியம், தெலங்கானா மாநிலங்களில் தலா 38 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. அதனையடுத்து கருநாடகா (37 மண்டலங்கள்), ஆந்திரா (25 மண்டலங்கள்), குஜராத் (21 மண்டலங்கள்), கேரளா (20 மண்டலங்கள்), உத்தரபிரதேசம் (14 மண்டலங்கள்), அரியானா (8 மண்டலங்கள்), மேற்கு வங்காளம் (7 மண்டலங்கள்), மத்திய பிரதேசம் (6 மண்டலங்கள்), ஒடிசா (5 மண்டலங்கள்), பஞ்சாப் (3 மண்டலங்கள்), ராஜஸ்தான் (3 மண்டலங்கள்), சண்டிகார் (2 மண் டலங்கள்), சத்தீஷ்கார் (ஒரு மண்டலம்) ஆகிய மாநிலங்கள் வருகின்றன.