ஆக்ஸ்ஃபோர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – பெரியார்தான் தமிழ் நாட்டின் முதலீடு! செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

17 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* பல்கலைக் கழகங்களின் தனித்தன்மை பாழாவதா? * ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்குத் தேர்தல் காரணம்?
* தே.ஜ.கூட்டணியில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பதே குழப்பம்! * அ.தி.மு.க.வில் எழுத்துக்குக் ஒன்றாய் பிரிவுகள்!

திருச்சி, செப்.5   பெரியார்தான் தமிழ்நாட்டின் முதலீடு! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (4.9.2025)  மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

பெரியார் மண்ணில்
ஆதிக்க சக்திகளுக்கு இடமில்லை

இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களுடைய 147 ஆம் ஆண்டு பிறந்த நாள். அதேபோல, அரசியல் பாதைக்குச் செல்லவேண்டும் என்ற காரணத்திற்காக, தந்தை பெரியார் அவர்களிடமிருந்து  தனியே  பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம்உருவாகி, அதன் 75 ஆவது ஆண்டு நடக்கக் கூடிய இந்த ஒரு சிறப்பான மாதம், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள், மிகுந்த எதிர்நீச்சலில் வெற்றி  பெற்று வருவது. ‘திராவிட இயக்கம் இனி இருக்காது; நீதிக்கட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது’ என்றெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு வெட்கித் தலைகுனியக் கூடிய அளவிற்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்கிறது. 1920 ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்ட நீதிக்கட்சி, இடையில் காங்கிரஸ் கட்சி மற்ற அமைப்புகள் ஆட்சியில் இருந்தாலும், மீண்டும், அது திராவிட இயக்கத்தினுடைய ஆட்சியாக, அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் 1967 இல் தொடங்கியது. எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இது பெரியார் மண், சமூகநீதி மண்.  இந்த மண்ணில் வேறு ஆதிக்கங்களுக்கு இடமில்லை என்று ஆக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பமாகும்.

இதைவிட இன்னும் மிகச் சிறப்பாகச் சொல்லவேண்டுமானால், தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, முழுக்க முழுக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமாக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள்.  பண்பாட்டுப் பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு இவற்றையெல்லாம் செய்து ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கினார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டு  நிறைவு பெற்று, இப்பொழுது நூற்றியொன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கக் கூடிய காலகட்டமாகும்.

இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில், ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அய்ந்தாம் முறையாக ஆட்சி நடத்தி முடித்தவுடன், அவர் மறைந்தபோது, தமிழ்நாட்டில் வெற்றிடம்தான்; அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று, ‘‘வெற்றிடம் அல்ல தமிழ்நாடு; மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கற்றிடம்’’ என்று மிகத் தெளிவாக இன்றைக்குத் தன்னுடைய ஆட்சியில் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

நான்காண்டு ஆட்சி முடிந்து, நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமையேற்று எட்டாண்டுகள் ஆன நிலையில், மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கக் கூடிய அளவிலும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலீடுகளை வரவேற்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று, தமிழ்நாட்டுத் திட்டங்களையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லியதோடு, தமிழ்நாடு ஓர் அமைதிப் பூங்கா – இங்கே மதக்கலவரங்களோ, ஜாதிக்கலவரங்களோ  மற்ற மாநிலங்களைப் போல குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இல்லை என்பதிலும் நம்பிக்கையூட்டிய காரணத்தால், இன்றைக்கு ஏராளமான முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.

நம்முடைய முதலமைச்சர் முதலீடுகளை வெளிநாடுகளில் பெறுவதற்காகச் சென்றிருந்தாலும், பெரியார் என்ற முதலீடுதான் எல்லாவற்றையும்விட,  மிக முக்கியமானது என்பதற்கு அடிப்படையாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்  பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி Cambridge University Press சார்பில், பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி, முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் இணைந்து  ஆகியோர் உருவாக்கியிருக்கக்கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூலை வெளியிட உள்ளார்கள்.

ஆகவே, இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இந்த இயக்கத்தின் ஆழமான, அதனுடைய வேரை யாரும் கிள்ளி எறிய முடியாது.  தமிழ்நாட்டிற்கு வந்து, தி.மு.க.வை அழித்துவிடுவோம், திராவிட உணர்வையே அழித்துவிடுவோம் – வேரோடு பிடுங்கி எறிந்துவிடுவோம் என்றெல்லாம் அமித்ஷாவோ, மோடியோ பேசுவது அர்த்தமற்றதாகும்.

ஆனால், ஒன்றிய ஆட்சி அவர்களுடைய கைகளில் சிக்கி இருக்கின்றது. இதைவிட்டால், இனிமேல் ஆட்சி அமைக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது என்ற காரணத்தினால், கல்வித் துறையில் உள்பட  ஒவ்வொரு துறையிலும்,   தங்கள் ஆதிக்கத்தை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பப்படித் திணிக்கிறார்கள்.

அதற்கு ஓர் உதாரணமாக, பல்கலைக் கழகக் கல்வித் திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை என்பதே, முழுக்க முழுக்க மதவெறியை, மிக முக்கியமாக மூடநம்பிக்கையை, சமூகநீதிக்கு விரோதமான கருத்தை உள்ளடாக்கியது. ‘தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறையிலும் சரி, கல்லூரிக் கல்வித் துறையிலும், பல்கலைக் கழகத் துறையிலும் ‘மத யானையைப் புகுத்துவதை’’  ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக்கியுள்ளது.

அதேபோல, எல்.ஓ.சி.எப். (LOCF) என்று சொல்லக்கூடிய ஒரு திட்டத்தை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் எண்ணம், திட்டம் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய திட்டப்படி, புராணங்களையெல்லாம் வரலாறாக ஆக்கிக் காட்டவேண்டும் என்பதுதான். இதுதான் கலாச்சாரம் – இதைப் படிக்கவேண்டும்; ஜோதிடத்தைக் கற்கவேண்டும்; புராணங்களும் அறிவியல்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். இதை இளைஞர் உலகம் புரிந்துகொண்டு எதிர்க்கிறது.

அந்த வகையில்தான், திராவிட மாணவர் கழகம், செப்டம்பர் 8 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டிலுள்ள முக்கியப் பெருநகரங்களில், இந்தக் கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றது.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், பல்கலைக் கழகங்களில், தங்களுக்கு இருக்கின்ற ஆளுநர்களின் ஆதிக்கத்தின் சார்பாக இதனைத் திணிக்க முயல்கிறார்கள்.

உதாரணமாகச் சொல்லவேண்டுமானால்,

கணிதப் பாடத்தில், கால கணனா (பாரம்பரிய இந்திய நேரக்கணிப்பு), பாரதிய பிஜ்கனித் (இந்திய இயற்கணிதம்) மற்றும் புராணங்களின் முக்கியத்துவம் போன்ற கருத்துகளில் இந்த வரைவு கவனம் செலுத்துகிறதாம்! பல்லுறுப்புக்கோட்டுப் பிரிவிற்கான ‘பரவர்த்ய யோஜயேத் சூத்திரம்’ உட்பட வேத கணிதத்திலிருந்து நுட்பங்களையும் மாணவர்கள் படிப்பார்களாம். மேலும் ‘இந்திய நாட்காட்டி (பஞ்சங்கா) குறித்தும் சடங்குகளுக்கான நல்ல நேரங்களை (மஹூர்த்தங்கள்) தீர்மானிப்பதில் அதன் பங்கு பற்றியும் அறிந்து கொள்வார்களாம்.

நாம், இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். அதை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு பக்கத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால், புராணக் கருத்துகள், நல்ல நேரத்தை நாங்கள் பல வழிகளில் கண்டுபிடிக்கின்றோம் என்றெல்லாம் சொல்வது போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் என்று முடிவெடுத்து, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. ஏற்கெனவே, ஒத்தக் கருத்துள்ள இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளும் இதனைக் கண்டித்துள்ளார்கள்.

அதேபோல, பெற்றோர்களும் இதனை உணர வேண்டும். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைக் கழகங்களில்  ஒன்றிய அரசின் இதுபோன்ற தலையீடுகள் இருக்கின்றன. பல்கலைக் கழகங்களில், இப்படிப்பட்ட தலையீடுகள் இருக்கவே கூடாது.

பல்கலைக் கழகம் என்றால், அதற்குரிய பாடத் திட்டங்களை அமைக்கத் தனியே அகடெமிக் கவுன்சில் இருக்கின்றது. செனட் இருக்கின்றது. சிண்டிகேட் அல்லது போர்டு ஆஃப் மேனேஜ்மெண்ட் இருக்கிறது. அவர்கள்தான் இதனை முடிவு செய்யவேண்டும்.

அரசமைப்புச் சட்ட விரோத – பாசிசப் போக்காகும்

ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அவரவர்களுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை வைத்துக் கொள்ளலாம்.  அறவே எல்லாவற்றையும் எடுத்துவிட்டு, ‘‘இந்தியா முழுவதற்கும் நாங்கள்தான் ராஜா, ஆகவே, நாங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும்’’ என்று சொல்வது என்பது ஒரு பாசிசப் போக்காகும்; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

எனவேதான், இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோம். சுயமரியாதை இயக்க நூற்றியொன்றாவது ஆண்டில், இதுபோன்ற பாடத் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோம்.

குருகுலக் கல்வி என்ற பெயராலே மீண்டும் ஸநாதனத்தை உள்ளே புகுத்துகிறார்கள். குருகுலத்தில் சிலரை  சேர்த்துக் கொண்டு, ‘‘இவர்கள் வேதத்தைப் படித்துவிட்டார்கள். அதனால் இவர்கள் நேரே கல்லூரியில் சேரலாம்’’ என்று ஒரு சான்றிதழ் கொடுத்தால், அவர்கள் அய்.அய்.டி. கல்வி நிறுவனம் வரையில் போகலாம் என்கின்ற ஒரு திட்டம் வந்திருக்கின்றது.

எனவே, இந்த ஆபத்தை உணரவேண்டும்.

அன்றைக்கு  குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்பு எழுந்தது. அதேபோன்று இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்படுகின்ற கல்வித் திட்டம் நம்முடைய மக்களை அறிவு அடிமைகளாக ஆக்குவதற்கு பழைய கருத்துகளைச் சொல்லி, அதன்மூலமாக ஹிந்துத்துவா கருத்துகளை ஆர்.எஸ்.எஸ். திணிப்பதாகவும் இருக்கிறது.

இதனை எதிர்த்து முதல் கட்டமாக, தொடக்கமாக திராவிட மாணவர் கழகத்தினர் தங்களுடைய எதிர்ப்புகளைக் காட்டவிருக்கிறார்கள்.

பைத்தியங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை

செய்தியாளர்: பெரியார் குறித்து எதிர்மறை கருத்துகள் நிறைய வருகின்றன. உதாரணமாக சீமான் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனரே?

தமிழர் தலைவர்: நாங்கள் பைத்தியங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. மாடுகளையும், மரங்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்குப் பைத்தியம் என்றுதான் பெயர்.  அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு நாங்கள் தயராக இல்லை.

ஆகவே, அவர்களுக்குப் பதில் அளித்து, எங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது.

நான் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானதாகும். தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கக் கூடிய கல்வியை அழிக்கக் கூடியதைப் பற்றிக் கவலைப்படுகின்றோம்.

எனவே, இந்த முக்கியமான நேரத்தில், பைத்தியங்களுக்காக, நாம், நம்முடைய நேரத்தை செலவழிப்பது அறிவுடைமையாகாது.

செய்தியாளர்: தொடர்ச்சியாக புதிய கல்விக் கொள்கையை புகுத்துவதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. அதனை நம்மால் எதிர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: இந்தப் பிரச்சினை ஒரு நாள், இரு நாள் பிரச்சினையல்ல. இந்தக் கல்வி முறையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி என்பது முதன்முதலாக மாநிலப் பட்டியலில் இருந்தது. அந்த மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித் திட்டத்தை, நெருக்கடி காலத்தில்,  மிசா சட்டத்தில் பலர்  கைது  செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருந்தபோது, பத்திரிகைகள் எல்லாம் தணிக்கைக்குக் உட்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில், மாநிலப் பட்டியலிருந்து  கல்வி எடுக்கப்பட்ட செய்திகூட, வெளியில் தெரியாமல் ஆக்கப்பட்டது.

நெருக்கடி காலம் முடிந்த பிறகு, பழைய சட்டங்களையெல்லாம் கேசவானந்த பாரதி என்ற வழக்கின் பெயரில் மீண்டும்  மாற்றினார்கள். அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தமும் வந்தது.

அப்படி திருத்தம் வந்தபோது, மற்றவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டே வந்தார்கள். மாநிலப் பட்டியலில் கல்வி என்று திருத்தம் வரவேண்டும்;  ஆனால், அதைக் கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றினார்கள்.

மூன்று பட்டியல் உண்டு.

ஒன்று, யூனியன் லிஸ்ட் –  ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கக்கூடியதாகும்.

இரண்டாவது ஸ்டேட் லிஸ்ட் – மாநில அரசின் அதிகாரத்தின்கீழ் இருக்கக் கூடியதாகும்.

மூன்றாவது, கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒத்திசைவுப் பட்டியல். சிலர் புரியாமல் சொல்வார்கள்,  பொதுப்பட்டியல் என்று. அது பொதுப்பட்டியல் அல்ல. பொதுப் பட்டியல் என்றால், காமன் லிஸ்ட் என்று பொருள். கன்கரண்ட் லிஸ்ட் என்றுதான் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. கன்கரண்ட் (Concurrent) என்றால், ஒத்திசைவு. இரண்டு அரசுகளும், அதாவது மாநில அரசும் நிர்வாகம்  செய்து கொள்ளலாம், ஒன்றிய அரசும்  நிர்வாகம் செய்து ெகாள்ளலாம். இந்தப் பட்டியலில்தான் கல்வியை வைத்தார்கள்.

இரண்டு அரசுகளுக்கும் உரிமை உண்டு; அவரவர்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், மாநிலத்தினுடைய அதிகாரத்திற்கு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், ஒன்றிய அரசினுடைய ஒப்புதலைப் பெறவேண்டும்.

மும்மொழிக் கொள்கையைத்  தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டோம்; இரு மொழிக் கொள்கைதான்.

இரு மொழிக் கொள்கையை அண்ணா அவர்கள் நிறைவேற்றி,  50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கின்றது. அரசியலமைப்புச்  சட்டப்படி நமக்கு உரிமை இருக்கின்றது.

பாதுகாக்க வேண்டியவர்களே பாழாக்குவதா?

அதேபோன்று பல்கலைக் கழகங்களுக்கு, ஒவ்வொரு பல்கலைக் கழகமும்  தன்னிச்சையாக இயங்கவேண்டும். பல்கலைக் கழகங்களுக்குத் தனியாக பாடத் திட்டக் குழு உண்டு.

இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்வது அரசியலமைப்புச் சட்டப்படி.  தவறான அணுகுமுறையாகும்.

பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு என்ன வேலை?  பல்கலைக் கழகம் ஒழுங்காக இயங்குகிறதா? கொடுக்கின்ற பணத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா? என்பதைக் கவனிப்பதுதான்.

ஆனால், இன்றைக்குப் பல பல்கலைக் கழகங்களுக்குப் பணமே கொடுப்பதில்லை.

வேலியே பயிரை மேய்வது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, பாதுகாக்கவேண்டிய இவர்களே, பாழாக்குகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் நாங்கள்தான் உத்தரவு போடுவோம் என்று, அதன்படித்தான் நீங்கள் நடக்க வேண்டும், இதைத்தான் படிக்கவேண்டும் என்று  பாடத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். பாடத் திட்டத்தை வரையறுக்கக் கூடிய உரிமை பல்கலைக் கழக மானியக் குழுவிற்குக் கிடையாது.

அதேபோன்று, துணைவேந்தர் நியமனத்தில்  ‘‘நாங்கள் சொல்லுகின்ற ஆளைத்தான் அந்தப் பொறுப்புக்குப் அமர்த்த  வேண்டும்’’ என்கின்ற உரிமையும் பல்கலைக் கழக மானியக் குழுவிற்குக் கிடையாது.

3, 5, 8  ஆம் என்று பொதுத் தேர்வு, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தவேண்டும்  என்று சொன்னார்கள். இதற்குப் பிறகு நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். பிறகு க்யூட் தேர்வு வந்தது. தேர்வு, தேர்வு என்று திணிக்கிறார்கள்.

அதனால்தான், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தெளிவாகத் திட்டவட்டமாக சொல்லிவிட்டது. கருநாடக அரசும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. இப்படி பல மாநிலங்கள் தங்களுடைய கருத்துகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தெளிவாகத் தெரிகிறது, தங்களுடைய ஏவல் ஆட்சி முடியப் போகிறது என்று! ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், பா.ஜ.க.விற்கும்  உள்ளே ஒரு பனிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இப்போது ஒன்றியத்தில் உள்ள அரசு மைனாரிட்டி அரசாகும். இரண்டு மாநில அரசுகள் முட்டுக் கொடுப்பதனால்தான், ஒன்றிய அரசு நீடித்துக் கொண்டிருக்கின்றது.

ஒன்று, ஆந்திர மாநில அரசின் சந்திரபாபு நாயுடு ஆதரவு; இன்னொன்று, பீகார் மாநில அரசின் நிதிஷ்குமார் ஆதரவு. பீகாரில் இப்போது அவருடைய ஆட்சி ஆட்டங் கண்டிருக்கிறது. அதற்காகத்தான், பீகாருக்குச் சலுகை காட்டுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ஜி.எஸ்.டி. வரிச் சலுகைக்குக்
காரணம் என்ன?

இவ்வளவு நாள் இல்லாத அக்கறை, திடீரென்று இப்போது வந்திருக்கிறது ஜி.எஸ்.டி. வரிச் சலுகையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்றால், பீகார் மாநிலத்திற்கு நடக்க இருக்கின்ற தேர்தல்தான்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கேட்கின்றவர்கள், அர்பன் நக்சல்கள் என்றார்கள். ஆனால், அவர்களே தற்போது ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிறார்கள். ஆனால், எப்போது நடத்துவோம் என்று சொல்லவில்லை.  அதற்கும் காரணம் பீகார் மாநிலத்தில் நடைபெறவிருக்கக் கூடிய தேர்தல்தான்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று சொல்லியும், தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என்று அவர்கள் நினைத்த காரணத்தினால், பீகாருக்கு மட்டும் ஏதாவது செய்தால், அது பளிச்சென்று வெளியில் தெரியும் என்பதால், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரிச் சலுகையை செய்திருக்கிறார்கள். இவ்வளவு நாள் இல்லாத அக்கறை, இப்போது அவர்களுக்கு வந்திருக்கிறது என்றால், இதுதான் காரணம்.

ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்து, அதன்மூலமாக வருமானத்தை நாங்கள் உயர்த்துகின்றோம் என்று அவர்கள் காட்டுவதைவிட, அமெரிக்க அதிபர் டிரம்ப்பினுடைய கொள்கையால், 50 சதவிகித ஏற்றுமதி வரியால், 2 லட்சம் பேரின் வேலை வாய்ப்புப் பறிபோயிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், ஜி.எஸ்.டி. வரிச் சலுகையைக் கொடுக்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும், வருமானத்தை   அதிகப்படுத்தி, அதனை மானியம் (Subsidy)  மூலம், உதவிமூலம் வியாபாரிகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிறோம் என்று சொல்லவேண்டிய காலகட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்கிறோம் என்று சொன்னால், அது என்ன நியாயம்?

இதற்குக் காரணம், பீகார் தேர்தல்தான்!

இப்போது செய்யாவிட்டால், எப்போதும் செய்ய முடியாது என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

ஏனென்றால், அவர்களுக்குள் பனிப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு 75 வயதாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி, 75 வயதுக்குமேல் பொறுப்பில் இருக்கக்கூடாது. ஆனால், அடுத்த தலைவர் யார் என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை.

அடுத்த தேர்தலில், இப்போது பெற்ற இடங்களைக்கூட அவர்களால் பெற முடியாது என்பதால்தான், இப்போதே அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக முன்னணி என்று சொல்வதன் நோக்கம் என்ன?   பி.ஜே.பி. தேசிய ஜனநாயக முன்னணியினரைக் கலந்துதான் கொள்கைகளை வகுக்கின்றதா என்றால், அதுதான் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் அந்தக் கொள்கைகளை வகுக்கின்றது. எனவே, இந்த ஆபத்துகளையெல்லாம் தடுக்கவேண்டும் என்று சொல்கிறோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பே இறுதியானதா?

செய்தியாளர்: ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமா?

தமிழர் தலைவர்: ‘‘பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா?  பணிப் பாதுகாப்புக்குக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம்’’ என்று இன்றைக்குக்கூட ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.

நம்முடைய ஆசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே  ஏற்கெனவே அதற்குரிய தேர்வுகளையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஓய்வுப் பெறப் போகும் காலகட்டத்தில், டெட் தேர்வு எழுதவேண்டும் என்று சொல்வது தவறானதாகும்.

உச்சநீதிமன்றத்தில் பல தீர்ப்புகள் இப்படி வருகின்றன. அந்தத் தீர்ப்புதான் இறுதியானது என்று சொல்ல முடியாது. மறுபடியும் சீராய்வு மனு போட்டால், வேறு வித தீர்ப்பாகும்.

ஆகவே, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புகள் முடிந்த முடிவாக இல்லை என்பதற்கு உதாரணம், நாய்க்கடி தீர்ப்பே போதுமானதாகும்.

நாய்க்கடியைவிட, அதிகமான கடிகளைக் கடித்திருக்கின்றன உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்.

முதலில் இரண்டு நீதிபதிகள் ஒரு தீர்ப்பைச் சொன்னார்கள். அதற்கடுத்து இன்னொரு நீதிபதி, நாய்களையெல்லாம் ஓரிடத்தில் அடைக்க வேண்டும் என்று சொன்னார்.

இன்னொரு நீதிபதி, நாய்களை உள்ளே அடைத்து வைக்கக் கூடாது; அது ஜீவகாருண்ய பிரச்சினையாகும். ஆகவே, அந்த நாய்களுக்கு எல்லாம் ஊசிப் போடவேண்டும் என்று சொன்னார்.

நாய்களுக்கு ஊசிப் போடுவது முக்கியமா? நாய்களையெல்லாம் உள்ளே அடைத்து வைப்பது முக்கியமா? என்று நாய்க்கடி விஷயத்திலே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு உள்ளன.

ஆகவே, நாயைப்பற்றிக் கவலைப்படுவதோடு, மனிதர்களைப்பற்றியும்  கவலைப்படவேண்டும்.

ஆசிரியர்கள் என்பவர்கள், மாணவர்களைத் தயார்படுத்தக் கூடியவர்கள். அவர்களுடைய பணி என்பது மிகவும் சிறப்பானதாகும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும், இவ்வளவு ஆண்டுகாலமாக ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பதற்கு என்ன வழிமுறை என்பதைத் தெளிவாகச் செய்யவேண்டும்.

இது வெறும் ஆசிரியர்கள் பிரச்சினை மட்டுமல்ல; எதிர்காலத்தில் இருக்கக்கூடிய கல்விப் பிரச்சினை. எல்லாவற்றையும் தாண்டி, மனிதாபிமானப் பிரச்சினையாகும்.

ஆசிரியர்கள் எத்தனை முறை தேர்வு எழுதுவார்கள்? எத்தனை வயதில் தேர்வு எழுதுவார்கள்? தேர்வு எப்படி நடக்கிறது என்பதுபற்றி, நீட் தேர்வில் நாமெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். கேள்விகள் எப்படி கேட்கப்படுகின்றன என்பதும் நமக்கெல்லாம் தெரியும். மதிப்பெண்தான் கடைசி எல்லை என்பது கிடையாது.

ஆகவேதான், மீண்டும் மீண்டும் தேர்வு தேர்வு என்று சொன்னால், அது எப்படி நியாயமாகும்?

அதுமட்டுமல்ல, ஒரு நீதிபதி எழுதுகின்ற கருத்தை, இன்னொரு நீதிபதி ஏற்றுக்கொள்ளமால் இருக்கக்கூடிய நிலையும் இருக்கிறது.

நீதிபதிகள் தேர்வில்கூட, இந்த நீதிபதியை நாங்கள் பரிந்துரை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அதை மீறித்தான், அந்த நீதிபதியைப் பொறுப்பேற்கச் செய்கிறார்கள்.

அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலேயே தெளிவான முடிவு இல்லாதபோது, ஆசிரியர்கள் தேர்வுப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதுதான் இறுதி என்று சொல்ல முடியாது.

ஆனால், ஜனநாயகத்தில் மனிதாபிமானத்தோடு பார்க்கும்பொழுது, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தாண்டி, மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்புதான் இறுதி முடிவாகும்.

அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்கிறார்களோ இல்லையோ, நம்முடைய மாநிலத்தில் ‘‘இது எங்களுக்கு ஏற்புடையதல்ல. இதற்கான மாற்று வழி இதுதான்’’ என்று ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் குடையை தமிழ்நாடு அரசு வழங்கும். அதனை நாங்களும் வற்புறுத்துவோம்.

கரைந்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: இதில் மிக முக்கியமானது என்னவென்றால், முதலில் மோடி வந்தார், ஓ.பன்னீர்செல்வத்தை வெளியே கொண்டு வந்தார். அது அவருடைய சாதனை.

அடுத்து, அமித்ஷா திருநெல்வேலிக்கு வந்தார்; அடுத்தபடியாக இன்னொருவரை வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

அவர்கள் அடிக்கடி வரவேண்டும். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே இருக்கின்றவர்கள் இருக்கிறார்களா? என்றால், கிடையாது.

‘‘நாங்க புதுசாக் கட்டிக் கொண்ட ஜோடிதானுங்க’’ என்று பாடுவதுபோன்று, யார் இருக்கிறார்கள் என்றால், எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்கிறார்.

அ.தி.மு.க. என்றுகூட இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால், அ.தி.மு.க.வில் எத்தனை எழுத்துகள் இருக்கிறதோ, அத்தனைப் பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவில் ஒருவரிடம் கேள்வி கேட்டால், நான் 5.9.2025 அன்று என் மனம் திறந்து பேசுகிறேன் என்று சொல்கிறார்.

அடுத்தபடியாக இன்னொருவரிடம் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் என்று கேட்டால், டிசம்பரில் முடிவு செய்வோம் என்று சொல்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்கிறார்கள். அதில், பா.ம.க. இருந்தது. இப்போது இருக்கிறதா?

பா.ம.க.வே இருக்கிறதா, என்று கேள்வி. ஏனென்றால், அது பா, ம, க என்ற சூழ்நிலையி்ல இருக்கிறது. 8 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தகப்பன் – மகன் சண்டையா? அல்லது தத்துவத்திற்காக சண்டையா? அல்லது அதிகாரச் சண்டையா? என்பதில் நாங்கள் உள்ளே செல்ல விரும்பவில்லை.

அவர்கள் யாரை ஆதரிக்கப் போகிறர்கள் என்ற பிரச்சினை அங்கே!

எடப்பாடியார் கட்சி என்றுதான் சொல்ல வேண்டும்

ஏற்கெனவே அங்கே இருந்த விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், டிசம்பரில்தான் முடிவு செய்வோம் என்று சொல்கிறார்கள்.

இப்போது டிசம்பர் மாதத்திற்கு முக்கியத்துவம் வந்திருக்கிறது. எல்லோரும் டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், டிசம்பரில் எடப்பாடி பழனிசாமி அங்கே இருப்பாரா? அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் இப்போதைய தமிழ்நாட்டு அரசியல்.

ஆகவே, தேசிய ஜனநாயக முன்னணியில், இரண்டே கட்சிதான் இருக்கிறது. ஒன்று பி.ஜே.பி., அவர்களோடு சேர்ந்திருக்கின்ற எடப்பாடியார் கட்சி. அதை அ.தி.மு.க. என்று சொல்ல முடியாது.

எடப்பாடியார் கட்சி என்றுதான் சொல்ல முடியும்.

செய்தியாளர்: த.வெ.க. தலைவர் விஜய்  தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்து சொல்ல முடியவில்லை. உச்ச ஏலம் யார் கேட்பார்கள்? ஏலத்தினுடைய தேதி என்ன? நவம்பரா? டிசம்பரா? என்று சொல்லக்கூடிய அளவில் இல்லை.

வேடிக்கைகள், வித்தைகள், சினிமா கூத்து என்பவை தமிழ்நாட்டு அரசியலை மாற்றிவிட முடியாது.

மாநாடுகளை அவர் நடத்தலாம். ஆனால், அவருடைய கட்சியின் கொள்கைகள் என்னவென்று சொல்லவில்லை!

அவர் பேசுவது திரைப்பட வசனங்களாக இருக்கலாம்; அது அரசியலுக்குப் பயன்படாது.

ஆகவேதான், இந்தக் கூத்தையெல்லாம் நாம் ரசிக்கலாம், சுவைக்கலாம், நகைச்சுவையாக!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *