மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆன பின்பு
ஒரே ஆண்டில் 947 குற்ற நிகழ்வுகள்– 25 பேர் உயிரிழப்பு!
புதுடில்லி, ஜூலை 1- சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஜூன் 9, 2024 அன்று பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரே ஆண்டில் 947 வெறுப்புக் குற்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Association for Prote ction of Civil Rights – ஏபிசிஆர்) அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஏபிசிஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
947 வெறுப்புக் குற்றங்கள்
மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு ஒரே ஆண்டில் 947 வெறுப்புக் குற்ற நிகழ்வு கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 345 வெறுப்புப் பேச்சுகள்; 602 வெறுப்புக் குற்றங்கள் ஆகும். இந்த 602 வெறுப்புக் குற்றங்களில் 173 குற்றங்கள் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட உடல் ரீதியான வன்முறையை உள்ளடக்கியது. அவற்றில் 25 குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உயரிழந்தனர் (25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம்).
குறிப்பாக சிறுபான்மையினரை இலக்காக குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெறுப்புக் குற்றச்சம்பவங்களில் 25–க்கும் மேற்பட்ட இந்து நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறுப்புக் குற்றத்தில் இந்து மக்கள் இலக்குகளாக இல்லாவிட்டாலும், அவர்கள் நிகழ்விடத்தில் இருந்ததால் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்துக்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பது மிக மோசமானது.
மோடியின் வெறுப்புப் பேச்சு
2024 ஜூன் 7 முதல் 2025 ஜூன் 7 வரை பதிவான 345 வெறுப்புப் பேச்சுக்களில் 178 பேச்சுக்கள் பாஜக மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதில் பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 5 வெறுப்புப் பேச்சுக்கள், மோடியால் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதே போல 63 பேச்சுக்கள் பாஜக அரசுகளின் முதலமைச்சர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. 71 பேச்சுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டன.
மாதம் 80 நிகழ்வுகள் நாட்டில் வெறுப்புக் குற்றங்கள் மிகவும் வழக்கமாகிவிட்டதால், ஒரு மாதத்தில் 80 நிகழ்வுகள் பதிவு செய்வது சர்வசாதாரணமாக மாறி விட்டது. அதே போல சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் அக்டோபர் 2024 மற்றும் ஏப்ரல் 2025 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான (80–க்கும் மேல்) வெறுப்புக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் பதிவாகி யுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றங்களின் தலைமையிடம் பா.ஜ.க.
பாஜக தான் வெறுப்புக் குற்றங்களின் தலைமை யகம் வன்முறை மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரல்கள் ஒருபோதும் விளிம்பு நிலை சக்திகளின் செயல் அல்ல. மாறாக பாஜக தலைமையிலிருந்தே நேரடியாக உருவாகின்றன.
அதாவது பாஜகவிடம் பெறப்படும் உத்தரவு மூலமாக வெறுப்புக் குற்றங்கள் நிகழ்கின்றன. 345 வெறுப்புப் பேச்சுகளில், பாஜக 178 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளுடன் முதலிடத்திலும், விஸ்வ இந்து பரிஷத் 21 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளுடன் இரண்டாவது இடத்திலும், பஜ்ரங் தளம் 20 நிகழ்வுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இவ்வாறு சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.