ஜெய்ப்பூர், ஜூன் 22- டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நாள் விரைவில் வரும். நமது கலாச்சாரம், வரலாறு, மதத்தை புரிந்து கொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது” என்றார். அவரது பேச்சை பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இந்திக்கு ஆதரவாக இருந்தாலும், ஆங்கிலம் என்பது உலக அளவில் புதிய வழிகளை திறக்கும் ஒரு பன்னாட்டு மொழி என்று ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு, ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற மக்களின் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்துவதற்காக சுமார் 3,700 காந்தி ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவியது. இதன் மூலம், சுமார் 6.50 லட்சம் மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை பெறத் தொடங்கினர்.
ஆங்கில வழிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 10,000 ஆசிரியர்களை நியமிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டது. பின்னர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு இந்த ஆங்கில வழிப் பள்ளிகளை மூட முயன்றது. ஆனால், பொதுமக்களிடையே அந்த பள்ளிகளுக்கு இருந்த வரவேற்பு காரணமாக அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.
ஆனால், ஆங்கிலம் என்பது உலக அளவில் புதிய வழிகளை திறக்கும் ஒரு பன்னாட்டு மொழி. உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பலர் ஆங்கிலத்தை எதிர்க்கின்றனர்.
இருப்பினும் பெரும்பாலான ஒன்றிய அமைச்சர்களின் குழந்தைகள் வெளிநாடுகளில் ஆங்கிலக் கல்வியை பெறுகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்நிலையில் அவர்கள் இங்குள்ள மக்களை குழப்புகிறார்கள்.
முன்பு நாங்களும் ஆங்கிலத்தை எதிர்த்தோம். ஆனால், ஆங்கிலம் காலத்தின் தேவையாக மாறியது. எனவே எங்கள் அணுகுமுறையையும் மாற்றிக் கொண்டோம்.
இன்று கணினிகள், இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், இளம் தலைமுறையினர் ஆங்கிலத்தின் மூலம் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெற முடியும்.”
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.