சென்னை, ஜூன் 21- மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயர் ஆர்.பிரியா நேற்று (20.6.2025) வழங்கினார்.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்கள் 75 நிமிடங்கள், திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக, தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 29 மாநகராட்சி பள்ளிகளில் 1,500 மாணவிகளுக்கு, அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.
நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கு தலா 50 மாணவிகள் என 1,000 மாணவிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் என வாரத்துக்கு 3 நாட்கள், மாதத்துக்கு 12 நாட்கள் வீதம் 4 மாதங்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு கராத்தே சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, புளியந்தோப்பு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையர் (கல்வி) ஜெ.விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கான
கட்டணம் இல்லாத பயண அனுமதிச்சீட்டு விநியோகம்
சென்னை, ஜூன் 21- மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும்.
இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் 2 வண்ண ஒளிப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.