பெரியார் சிறை சென்ற பின், வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர்கள் அன்னை நாகம்மையாரும், பெரியாருடைய தங்கை கண்ணம்மாளும்தான்!

Viduthalai
11 Min Read

மிசாவில் கைதானபோது மன்னிப்புக் கடிதம்
எழுதிக் கொடுக்காத இயக்கங்கள் சிலவே!
இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கத்திற்கு, ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அன்னை மணியம்மையார்தான்!
குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

கும்பகோணம், ஜூன் 21 மிசாவில் கைதானபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காத இயக்கங்கள் இரண்டுதான்; ஒன்று, திராவிடர் கழகம்; மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கத்திற்கு, ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் யார் என்றால், அன்னை மணியம்மையார்தான். வைக்கம் போராட்டத்தில் பங்கேற்று சிறைச்சாலைக்குப் பெரியார் போன பிறகு, அப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர்கள் அன்னை நாகம்மையாரும், பெரியாருடைய தங்கை கண்ணம்மாளும்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
மிசாவில் கைதானபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காத இயக்கங்கள் சிலவே! இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கத்திற்கு, ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அன்னை மணியம்மையார்தான்! குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரைசுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு ‘‘நாதசுர சக்கரவர்த்தி’’ பட்டம் கொடுக்கவேண்டும்எங்களுக்கு ஜாதி கிடையாது; எங்களுக்குப் பேதம் கிடையாது!சுயமரியாதை இயக்கத்தினால் பயன் பெறாத ஒரு சமூகம் உண்டா?அன்னை மணியம்மையாரிடம் மன்னிப்புக் கேட்ட சிறை அதிகாரி!மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காத இயக்கம் சிலவே!எம்.ஆர்.இராதாவின் நகைச்சுவை!ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அன்னை மணியம்மையார்தான்!பெரியார் என்பவர் மனிதாபிமானத்தின் உச்சக்கட்டம்!கட்சி என்பது வேறு; இயக்கம் என்பது வேறு!ஒன்றிய அமைச்சரின் நிபந்தனையை ஏற்காத அன்னை மணியம்மையார்!எங்கள் தோழர்கள் சிறையிலேயே மடிந்து போகட்டும்; நீங்கள் விடுதலை செய்யவேண்டிய அவசியமில்லை!தந்தை பெரியாரின் உறுதி!அன்னை மணியம்மையார்தான் காரணம்; அண்ணாவின் ஒப்புதல்!‘‘மானமும், அறிவும்தான் மனிதருக்கு அழகு!’’ஒவ்வொருவரும் உறுதியேற்றுக் கொள்ளவேண்டும்!ெகாள்கையை உறுதியோடு கடைப்பிடிப்போம்,  வெற்றி நமதே!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!

கடந்த 7.6.2025 அன்று மாலை  கும்பகோணத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு ‘‘நாதசுர சக்கரவர்த்தி’’
பட்டம் கொடுக்கவேண்டும்

பெரியார் திடலில், தந்தை பெரியாருக்கு 95 ஆவது பிறந்த நாள் – அவர் இருந்து, அதுதான் அவரது கடைசி பிறந்த நாள் விழாவென்று நமக்கெல்லாம் அப்போது தெரியாது –  அந்த விழாவில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாதசுரம் வாசித்தார். அவருக்கு ‘‘நாதசுர சக்கரவர்த்தி’’ என்று பட்டம் கொடுக்கவேண்டும் என்று நாங்கள் அய்யாவிடம் சொன்னோம். அய்யாவும் மகிழ்ச்சியாக, தாராளமாகக் கொடுக்கலாம் என்றார். அவருடைய மருமகன் நடராஜன் அவர்கள், அகில இந்திய வானொலியில் இயக்குநராக இருந்தவர்.

அப்பிறந்த நாள் விழாவிற்கு, இராஜா சர் முத்தையா செட்டியார் ஒரு பெரிய சரிகை மாலையை எடுத்துக்கொண்டு வந்தார். அவர்தான் செட்டிநாட்டு அரசர். நாங்கள் படித்த அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் அவர்.

அய்யா பிறந்த நாள் விழாவிற்கான அழைப்பிதழை அவருக்கு அனுப்புவதற்கு நாங்கள் மறந்துவிட்டோம். ஆனால், பெரியார் பிறந்த நாள் விழா என்பதை அவரே தெரிந்துகொண்டு, அவ்விழாவிற்கு நேரில் வந்துவிட்டார்.

பிறகுதான் நாங்கள் செய்த தவறு எங்களுக்குப் புரிந்தது. அவரிடம் ஓடிச் சென்று, ‘‘அய்யா மன்னித்து விடுங்கள்; அழைப்பிதழ் அனுப்புவதற்கு மறந்து விட்டோம்’’ என்றேன்.

பரவாயில்லை, என்று சொல்லி, அய்யாவிற்கு மாலை அணிவித்துவிட்டு, அய்யாவின் அருகே அமர்ந்தார்.

அய்யா அவர்கள், ‘‘அவரை, ‘ராஜா’ என்று மரியாதை யோடு’’ அழைப்பார். அப்போது, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை அழைத்து, பக்கத்தில் அமர வைத்தார் அய்யா.

அவர், நாற்காலியில் அமந்திருந்தாலும், அமராதபடி நெளிந்து கொண்டிருந்தார். ஏனென்றால், அந்தப் பக்கம் இராஜா முத்தையா செட்டியார் அமர்ந்திருக்கின்றார்.

அந்த 95 ஆம் ஆண்டு அய்யாவின் கடைசிப் பிறந்த நாள் விழாவில், ‘‘தோளில் துண்டு போட்டு நாதசுரம் வாசிக்கக்கூடாது’’ என்று ஒரு சமுதாயத்தைப் பார்த்து எந்த சமுதாயத்தினர் சொன்னார்களே, அந்த சமுதாயத்தின் தலைவர் முன்னால், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை நாற்காலியில் அமர வைத்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எங்களுக்கு ஜாதி கிடையாது; எங்களுக்குப் பேதம் கிடையாது!

எங்களுக்கு ஜாதி கிடையாது; எங்களுக்குப் பேதம் கிடையாது. மேல், கீழ் என்றெல்லாம் கிடையாது. எல்லோரும் மனிதர்கள்; மனிதத் தன்மையை மதிக்கவேண்டும். ஆண் – பெண் என்ற பேதமில்லை. உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமில்லை. பணக்காரர் – ஏழை என்ற பேதமில்லை.

சுயமரியாதை இயக்கத்தினால்
பயன் பெறாத ஒரு சமூகம் உண்டா?

மனிதர்கள் அத்துணை பேரும் சமம் என்ற உணர்வோடு இருக்கின்ற இயக்கம் இதுதான். இந்த இயக்கத்தினால் பயன் பெறாத ஒரு சமூகம் உண்டா? இன்றைக்கு யாரையாவது ஒதுங்கி நில், எட்டி நில் என்று சொல்ல முடியுமா?

இவற்றிற்காக சட்டம் வந்திருக்கிறதே, அது எப்படி? பெரியாருடைய பிரச்சாரத்தினால்தான். சுயமரியாதைச் சுடரொளிகள் பாடுபட்டு, சிறைச்சாலைக்குச் சென்றதன் விளைவாக.

இங்கே சாக்கோட்டை அன்பழகன் அவர்கள் உரையாற்றும்போது சொன்னார் அல்லவா – அவருடைய அப்பா நெல் குத்தி, கையெல்லாம் காப்புக் காய்த்திருந்தது என்று!

அவரும், இராஜகிரி கோ.தங்கராசு ஆகியோர் எல்லாம் போராட்டத்தின்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்ப்பதற்காக தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரை போகச் சொன்னார். அன்னையாருக்குத் துணையாக என்னையும் உடன் அனுப்பி வைத்தார்.

அன்னை மணியம்மையாரிடம்
மன்னிப்புக் கேட்ட சிறை அதிகாரி!

ஒவ்வொரு சிறைச்சாலையாகச் சென்று தோழர்களைச் சந்தித்தோம். அப்படி புதுக்கோட்டையில் உள்ள சிறைச்சாலைக்கு வந்தோம். அப்போது அங்கே இருந்தவர்களைப் பார்த்துவிட்டு, சிறை அதிகாரியை அழைத்து, கோபமாக ஆத்திரத்தோடு கேட்டார். ‘‘என்னங்க இது அநியாயம்? அவர்களுடைய வயது என்ன? அவர்களுடைய தகுதியைப்பற்றி தெரியுமா உங்களுக்கு?’’ என்று.

உடனே சிறை அதிகாரி, ‘‘அம்மா, மன்னித்து விடுங்கள், உடனே மாற்றி விடுகிறேன்’’ என்று சொன்னார். அப்போது நானும் கூட இருந்தேன்.

நம்முடைய தோழர்கள் சிறையில் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதற்குரிய அந்தப் பெருமை முழுவதும் அன்னை மணியம்மையாரையே சாரும்.

சிறைச்சாலைக்குச் சென்ற நம் தோழர்கள் ஒருவர்கூட மன்னிப்புக் கேட்கவில்லை. மிசா வில் கைது செய்யப்பட்டபோது மன்னிப்புக் கேட்கவில்லை.

மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காத இயக்கம் சிலவே!

ஒரு சில கட்சிகளைச் சார்ந்தவர்களிடம் மட்டும் வெள்ளைக் கடிதத்தை எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள் சிறை அதிகாரிகள். மற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் வெள்ளைக் கடிதத்தைக் கொண்டு போய் கொடுப்பார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால், வெளியில் விட்டுவிடுகிறோம் என்று சொல்வார்கள்.

எம்.ஆர்.இராதாவின்
நகைச்சுவை!

மிசாவின்போது எம்.ஆர்.இராதா அவர்களையும், எங்க ளோடு சேர்த்தே சிறைச்சாலையில் வைத்திருந்தார்கள்.

சிறையில், நேர் காணல் (கணவனைப் பார்க்க, மனைவி சிறைச்சாலைக்கு வரும்போது) செய்வார்கள். அப்போது, எங்களைச் சுற்றி காவல்துறையினர்தான் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, கணவன் – மனைவியும் என்ன பேசிக் கொள்வது?  நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? ஆம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்றுதான் பேசிக் கொள்வோம்.

அதுபோன்று, எம்.ஆர்.இராதா அவர்களுக்கு நேர்காணல் வந்தது. இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் அவர்.

எனக்குப் பக்கத்தில், அதாவது நடுவில் ஒரு திரை மட்டும் இருக்கும். அவர்,  சத்தமாகப் பேசுவார். அவருடைய துணைவியார் பெயர் தனலட்சுமி.

அந்த அம்மையார், ‘‘மாமா, ஏதோ எழுதிக் கொடுத்தால், விட்டுவிடுகிறேன் என்று சொல்கிறார்களே, நீ எழுதிக் கொடுத்துவிட்டு வரலாமே’’ என்றார்.

உடனே இராதா, ‘‘அப்படியா, என்னன்னு எழுதிக் கொடுக்கச் சொல்கிறாய்?’’ என்றார்.

அவருடைய துணைவியார், ‘‘எல்லோரும் எழுதிக் கொடுக்கிறார்களாமே, இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்’’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு வா’’ என்றார்.

நடிகவேள், ‘‘அப்படியா? நான் என்ன குற்றம் செய்தேன், தூங்கிக் கொண்டிருந்தேன். தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். ‘‘இனிமேல் தூங்கவே மாட்டேன்’’ என்று எழுதிக் கொடுக்கச் சொல்கிறாயா? அது முடியுமா?’’ என்றார்.

ஜெயிலர் உள்பட அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

அந்தக் காலத்தில், மிசாவில் கைதான திராவிடர் கழகத் தோழர்கள் ஒருவர்கூட மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கவில்லை.

இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

இன எதிரிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம்; அரைவேக்காடு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குச் சொல்கி றோம்; சில கூலிகளைப் பிடித்தெல்லாம் இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது ஒருபோதும் நடக்காது.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 12 பேரை சென்னை யில்  மிசாவில் கைது செய்தார்கள். அன்னை மணியம்மை யார் அவர்கள் வெளியில் இருக்கிறார். அய்யாவிற்குப் பின், இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர்.

ஒரு நாத்திக இயக்கத்திற்குத்
தலைமை தாங்கிய முதல் பெண்
அன்னை மணியம்மையார்தான்!

இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கத்திற்கு, ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் யார் என்றால், அன்னை மணியம்மையார்தான்.

வைக்கம் போராட்டத்தில் பங்கேற்று சிறைச்சாலைக்குப் பெரியார் போன பிறகு, அப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர்கள் அன்னை நாகம்மையாரும், பெரியாருடைய தங்கை கண்ணம்மாளும்தான். நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில்.

இங்கே யாரும், 1924 இல் பிறந்தவர்கள் இருக்க முடியாது. இன்றைக்கு இந்த வேரை அசைத்துப் பார்க்க முடியாது. வேரும் எங்கே இருக்கின்றது என்று தெரியாது.

பெரியார் என்பவர் மனிதாபிமானத்தின் உச்சக்கட்டம்!

சில பேர், கூலிகளைப் பிடித்து, பெரியார் பிம்பத்தை உடைத்துவிடலாம் என்று நினைக்கி றார்கள்.

பெரியார் என்ன பொம்மையா? உடைப்பதற்கு.

பெரியார் என்பவர், ஒவ்வொருவருடைய நாடி, நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதாபி மானத்தின் உச்சக்கட்டம்.

கட்சி என்பது வேறு;
இயக்கம் என்பது வேறு!

எல்லாக் கட்சியிலும் பெரியார் இருக்கிறார். கட்சி என்பது வேறு; இயக்கம் என்பது வேறு. ஒருவர், கதர்ச்சட்டை அணிந்திருப்பார்; ஒருவர் கருப்புச் சட்டை அணிந்திருப்பார்; இன்னொருவர் சிவப்புச் சட்டை அணிந்திருப்பார். இன்னொருவர், நீல நிறச் சட்டைப் போட்டிருப்பார்.

ஆனால், எல்லோரும் ‘‘திராவிடம் வெல்லும்’’ என்று சொல்லக்கூடிய உணர்வு படைத்தவர்கள். இதுதான் பெரியார் மண்.

காமராஜர் யார்?

அவர் சொன்னார், ‘‘வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது நான் சிறிய பையன்.  எனக்கு விவரம் தெரியாது, நானும் போனேன். ஆனால், எங்க ளைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்’’ என்றார்.

ஒன்றிய அமைச்சரின் நிபந்தனையை ஏற்காத அன்னை மணியம்மையார்!

நாங்கள் எல்லாம் மிசாவில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருந்தோம். அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர் பிரம்மானந்த ரெட்டி. ஆளுநராக இருந்தவர் சுகாடியா என்ற ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.

அப்போது அன்னை மணியம்மையார் அவர்கள், இராஜாராம் அவர்களை அழைத்துக்கொண்டு, ஆளு நரைப் பார்ப்பதற்காக அனுமதி வாங்கியிருந்தார்.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியும் அங்கு இருந்தார். அப்போது அன்னையார் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

உடனே பிரம்மானந்த ரெட்டி, ‘‘எனக்கு நன்றாகத் தமிழ் தெரியும்; நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்’’ என்றார்.

உடனே, அன்னையார், ‘‘எங்கள் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்; அவர்கள் அரசியலில்கூட இல்லையே! காரணமில்லாமல், அவர்களைக் கைது செய்து, பல மாதங்களாக சிறைச்சாலையில் வைத்தி ருக்கிறீர்களே?’’ என்று கேட்டார்.

அவர்களை உடனே விடுதலை செய்யச் சொல்கி றேன்; ஆனால், ஒரே ஒரு நிபந்தனைதான் அதற்கு என்று சொன்னார்.

‘‘என்ன செய்யவேண்டும்?’’ என்று அன்னையார் கேட்டார்.

‘‘தி.மு.க.வோடு நாங்கள் இணைந்திருக்க மாட்டோம்’’ என்று எழுதிக் கொடுங்கள் என்றார் பிரம்மானந்த ரெட்டி.

எங்கள் தோழர்கள் சிறையிலேயே மடிந்து போகட்டும்; நீங்கள் விடுதலை செய்யவேண்டிய அவசியமில்லை!

உடனே டக்கென்று நாற்காலியை விட்டு எழுந்து, ‘‘இதை நாங்கள் செய்ய முடியாது; பெரியார் உண்டாக்கிய உணர்வு. எங்கள் தோழர்கள் சிறையிலேயே மடிந்து போகட்டும்; நீங்கள் விடுதலை செய்யவேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

இப்படி சொன்ன இயக்கம்தான் இது.

எனவே, நாங்கள் மன்னிப்புக் கடிதம்
எழுதியதில்லை. அதனால், நிறைய சங்கடங்களை அனுப வித்திருக்கின்றோம்.

‘‘ஏன் இந்த ஆட்சி ஒழியவேண்டும்?’’ பெரியாருடைய தலைப்பு, ‘குடிஅரசு’ ஏட்டில். இதற்காக ‘குடிஅரசு’ ஏட்டின்மீது வழக்கு, வெள்ளைக்காரர்கள் காலத்தில் போடப்பட்டது.

எந்த ஆட்சி ஒழியவேண்டும்; வெள்ளைக்கார ஆட்சி. வெள்ளைக்காரர்களுக்குக் கால் பிடித்தார்கள் என்றெல்லாம் சிலர் புரியாமல் பேசுகிறார்கள்.

தந்தை பெரியாரின் உறுதி!

‘‘‘குடிஅரசு’ ஏட்டின்மீது மானம்’’ என்ற தலைப்பில் எழுதுகிறார். அதில், இதற்குமேல் தண்டனை கொடுத்தா லும் நான் சிறைச்சாலைக்குத்தான் செல்வேன் என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்.

‘‘இனியும் அதைத்தான் செய்யக் காத்துக் கொண்டி ருக்கின்றோம் என்பதையும் தைரியமாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால், ‘குடிஅரசு’ பத்திரிகை இருக்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இந்த இயக்கம்தான் கொள்கையை சமரசம் செய்யாத இயக்கம்.

சிறிது காலத்திற்கு முன், நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் கடமையைச் செய்ய முடியாது என்று தெரிந்தால், நாம் இருப்பதைவிட, இறப்பதுமேல் என்பதுபோல, ‘குடிஅரசு’ம் தன் கட மையை ஆற்ற முடியவில்லையானால், அது எதற்காக இருக்கவேண்டும்? அது மறைந்துபோக நேரிட்டாலும், ஆசிரியர் என்ற முறையில், நமக்குக் கவலையில்லை. எனவே, பதிப்பாளர் என்ற முறையிலும் கவலையில்லை’’ என்று சொன்னார்.

அன்றைக்கு அய்யாவிற்கு என்ன வயது தெரியுமா?

55 வயது. மே மாதம், ‘குடிஅரசு’ இதழில் எழுதுகிறார்.

அன்னை நாகம்மையார் மறைந்து, 6 மாதம் ஆகின்றது. அய்யாவிற்கு எந்தவிதமான துணையும் இல்லை. கண்ட நேரத்தில், கண்டதைச் சாப்பிடுவார். அப்படி சாப்பிட்டதால், வயிற்று வலி, வயிற்றில் புண்ணால் அவதிப்பட்டார்.

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஒருமுறை என்னிடம் கேட்டார்.

அன்னை மணியம்மையார்தான் காரணம்; அண்ணாவின் ஒப்புதல்!

‘‘ஏம்பா வீரமணி, அய்யாவிற்கு வயிற்று வலி வருமே – ஆறு மாதத்திற்கு முன்பே நான் இருக்கமாட்டேன் என்று சொன்னாரே, அதைக் கேட்டவுடன் எங்களுக்குக் கவலையாக இருந்தது. இப்போது அய்யா எப்படி இருக்கிறார்?’’ என்று.

‘‘வயிற்று வலியெல்லாம் இப்போது அய்யாவிற்கு இல்லை. நன்றாக இருக்கிறார், நன்றாகச் சாப்பிடுகிறார்’’ என்றேன்.

‘‘பார்த்தியாப்பா, அந்த அம்மாவினால்தான் அய்யா பிழைத்தார்; அந்த அம்மையார் இல்லையானால், அய்யா அவர்கள் உடல்நலத்தோடு இருக்க முடியாது’’ என்று அன்னை மணியம்மையார்தான் காரணம் என்று சொன்னார்.

அய்யா அவர்கள், தன்னுடைய உடல்நலத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை; தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி கவலைப்படவில்லை. கொள்கை உறுதியோடு இருந்தார்.

‘‘மானமும், அறிவும்தான்
மனிதருக்கு அழகு!’’

இதுபோன்ற உறுதியுள்ள நூறு பேரால், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்; ஆயிரம் பேரால் இந்த நாட்டினுடைய மானத்தை, அறிவைக் காப்பாற்ற முடியும்.

‘‘மானமும், அறிவும்தான் மனிதருக்கு அழகு’’ என்று சொல்வதுதான் சுயமரியாதை இயக்கம்.

அதனுடைய அரசியல் பிரிவுதான் திராவிட முன்னேற்றக் கழகம். அதனுடைய வெற்றிதான் மிகவும் முக்கியமானதாகும்.

ஒவ்வொருவரும் உறுதியேற்றுக் கொள்ளவேண்டும்!

எனவேதான், மீண்டும் இதே வரலாறு தொடரும்; தொடரவேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உறுதியேற்றுக் கொள்ளவேண்டும்.

எத்தனைக் கூலிப் பட்டாளங்கள் வந்தாலும், எத்தனைக் காலிகளை அழைத்து வந்தாலும், எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும், எத்தனை ஷாகாக்களை நடத்தினாலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம்.

சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

ெகாள்கையை உறுதியோடு கடைப்பிடிப்போம்,  வெற்றி நமதே!

இந்தக் கருத்தரங்கம் ஓர் அரிமா நோக்கு. ஒரு சிங்கம் திருப்பிப் பார்க்கின்றது என்று சொல்லக்கூடிய ஒரு நோக்கம் இதில் உள்ளது. திரும்பிப் பார்ப்போம்; மற்றவற்றைத் திரும்பிப் பார்க்காமல் முன்னேறுவோம். கொள்கையை உறுதியோடு கடைப்பிடிப்போம்!

வெற்றி நமதே!

திராவிடம் வெல்லும் – வரலாறு என்றைக்கும் அதைச் சொல்லும்!

சுயமரியாதை கொள் தோழா!

சுயமரியாதை கொள் தோழா!

சுயமரியாதை கொள் தோழா!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *