2026 சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்திப்பு
சென்னை, ஜூன் 18- பரமக்குடி, பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வெற்றிக்காக என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்’ என்பது போன்ற கேள்விகளை கேட்டார்.
உடன் பிறப்பே வா
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இப்போதே தயாராகிவிட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த 75 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் செல்வாக்கு குறைவாக காணப்படும் 25 தொகுதிகள் என 100 தொகுதிகளை குறி வைத்து தி.மு.க. தலைமை நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த 13ஆம் தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
3 தொகுதி நிர்வாகிகள்
அதைத்தொடர்ந்து, பரமக்குடி, பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம், ஆகிய 3 சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகளை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேற்று சந்தித்து பேசினார். இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் தனித்தனியே நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கட்சி நிர்வாகிகளிடம் அவர்களின் நிறை மற்றும் குறைகளை அந்த நிர்வாகிகளிடமே கூறச் சொல்லிக் கேட்டு அறிந்தார். அப்போது, அந்த நிர்வாகிகள் குறித்து தான் ஏற்கனவே சேகரித்து வைத்த நிறை, குறைகளையும் அவர்களிடம் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?
மேலும், ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள், நடத்திய கூட்டங்கள் குறித்த மினிட் புத்தகத்தையும், நிகழ்ச்சிக்கான ஒளிப்படங்களையும் கொண்டுவந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்துள்ளனர். அவற்றை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் சிலரின் மினிட் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்துள்ளார். பின்னர், மினிட் புத்தகங்களில் ஆய்வு செய்யப்பட்டது என்று எழுதப்பட்டு தி.மு.க. தலைமைக் கழகத்தின் சீல் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நிர்வாகிகள் சந்திப்பின் போது தங்கள் தொகுதியில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. தி.மு.க எவ்வளவு வாக்குகளை பெறும் அங்கு உங்கள் செல்வாக்கு என்ன? நீங்கள் இதுவரை என்னென்ன திட்டங்களை செய்து கொடுத்துள்ளீர்கள்? இனி வருங்காலத்தில் உங்கள் தொகுதிகளுக்கு என்ன செய்ய உள்ளீர்கள்?. தேர்தல் பணியாற்றுவது குறித்து என்ன திட்டம் வரையறை செய்துள்ளீர்கள்? என்பன போன்ற கேள்விகளை கேட்டார். அதற்கு நிர்வாகிகள் பதில் அளித்தனர்.
இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி தொகுதியில் தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.