உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131 ஆவது இடத்துக்கு சரிவு; 16 ஆவது ஆண்டாக அய்ஸ்லாந்து முதலிடம்!!

viduthalai
2 Min Read

உலகப் பொருளாதார கூட்ட மைப்பின், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 இன் படி, 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 131 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலகப் பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது உலகளவில் 146 நாடுகளின் பாலின சமத்துவத்தை விரிவாக விளக்கும் ஓர் ஆண்டறிக்கை ஆகும்.

இது கடந்த 19 ஆண்டுகளாக, 2006 ஆம் ஆண்டிலிருந்து தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறது. பாலின சுகாதாரம் (Health and Survival), கல்வி (Educational Attainment), பொரு ளாதாரம் (Economic Participation and Opportunity), அரசியல்(Political Empowerment) ஆகிய 4 காரணிகள் அடிப்படையில், ஆண் – பெண் இடை யேயான வேறுபாடுகளை கணக்கிட்டு பாலின சமத்துவத்தை அளவிடுகிறது.

சரிவு

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய பாலின இடை வெளிக் குறியீட்டில் (Global Gender Gap Index) கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 131 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம் என தெரி விக்கப்பட்டுள்ளது. தரவரிசையில் தெற்காசியாவின் மிகக் குறைந்த தரவரிசை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக, அய்ஸ்லாந்து உலகின் பாலின சமத்துவமிக்க நாடுகளில் முதன்மையான நாடாக திகழ்கிறது.

அதைத்தொடர்ந்து ஃபின்லாந்து (2 ஆம்), நார்வே (3 ஆம்), யுனைடெட் கிங்டம்(4 ஆம்) நியூசிலாந்து (5 ஆம் ) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

தெற்காசியாவில் சிறந்த செயல் திறன் கொண்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது. உலகளவில் 75 இடங்கள் முன்னேறி 24 ஆவது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது. நேபாளம் 125 ஆவது இடத்திலும், இலங்கை 130 ஆவது இடத்திலும், பூட்டான் 119 ஆவது இடத்திலும், மாலத்தீவுகள் 138 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 146 ஆவது இடத்திலும் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *