புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

viduthalai
2 Min Read

‘‘தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்போம்’’ என்கின்ற பா.ஜ.க.வின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது!
சட்டப்பேரவைத் தேர்தல்வரை பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா, நிலைக்குமா?
கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களா?

 

புதுவை, ஜூன் 9 ‘‘தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்போம்’’ என்கின்ற பா.ஜ.க.வின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! 2026 இல் நடை பெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தல்வரை பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா, நிலைக்குமா? கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களா? என்றார்  திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

நேற்று (8.6.2025) புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்து, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக அதில் அவர்கள் வெற்றியடைய முடியாது.

தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்பது பிறகு; முதலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி உருவாகியிருக்கின்றதா? அது தேர்தல் வரை நீடிக்குமா? தனித்த ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதை முடிவு செய்துவிட்டு, தி.மு.க.விடம் வரட்டும்!

அவர்களுடைய கனவுதானே தவிர, வேறொன்று மில்லை.

தமிழ்நாட்டில், கலவரத்தை உருவாக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்கள் முயற்சி செய்கின்றன.

ஒன்றிய உள்துறை அமைச்சரின்
பொறுப்பற்ற பேச்சு

‘‘எல்லோரும் முருகன் கோவிலுக்கு வாருங்கள்; தி.மு.க. ஆட்சியை எதிர்த்து இன்னமும் ஏன் கிளர்ச்சியை தொடங்காமல் இருக்கிறீர்கள்’’ என்று பேசுவது ஒன்றிய உள்துறை அமைச்சரின் பொறுப்பான பேச்சா?

கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ப தற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களா?

மூன்று முறை தோற்றும் அவர்களுக்குப்
புத்தி வரவில்லையே!

தமிழ்நாட்டில் அவர்களுடைய ஆசை நிறை வேறாது; அவர்கள் நினைப்பதுபோன்றும் நடக்காது. இதுவரையில், மூன்று முறை தோற்றும் அவர்களுக்குப் புத்தி வரவில்லையே!

எனவே, கடந்த முறை நடந்த தேர்தல்களில் அவர்கள் தோற்ற நிலையைவிட,  வரப் போகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

செய்தியாளர்: ஜாதிப் பிடிவாதத்தைத்தான் தி.மு.க. அரசியலாக்குகின்றது என்று சொல்கிறார்களே?

ஜாதியைக் காப்பாற்றுவதே
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்

தமிழர் தலைவர்: ஜாதியைக் காப்பாற்றுவதே
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். தி.மு.க. மீது அந்தக் குற்றத்தைச் சொல்ல முடியாது. ஜாதியை ஒழிப்பதற்குத்தான் தி.மு.க. இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதில்,
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலின் பங்கு என்ன? தி.மு.க.வின் பங்கு என்ன? என்ற ஒன்றே போதும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *