பட்டா வழங்குவதில் தமிழ்நாடு அரசு வேகம் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்காவிட்டால் நடவடிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 6– பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். கால தாமதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது.

ஒரு காலத்தில் நமது சொத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துகளுக்கு பத்திரப்பதிவு செய்தவுடன், ஒரு நிமிட பட்டா என்ற அடிப்படையில் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு விற்பவர் பெயரில்பட்டா இருக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில்…

எனவே சொத்து வாங்குபவர்கள், விற்பவரின் பெயரில் பட்டா இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 913 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்கலாம்

மேலும் உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளுக்கு இ-சேவை மய்யம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்கலாம்.

இந்த மனுக்கள் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உட்பிரிவு தேவையில்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாள்க ளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை

அதன் காரணமாக பட்டா வழங்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. அதாவது கடந்த காலங்களில் சர்வேயர்கள் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நட வடிக்கை எடுத்தனர்.

ஆனால் தற்போது சராசரியாக 80 என்ற அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு மிக முக்கியமாக கடந்த காலங்களில், செல்வாக்கு உள்ளவர்களும், கவனிக்கும் திறன் உள்ளவர்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஆனால் அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதாவது ஒரு சர்வேயர், பொதுமக்கள் விண்ணப்பித்த  தேதி அடிப்படை யில் வரிசையாகதான் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும். எந்த ஒரு மனுவையும் தங்களது விருப்பப்படி முன்னதாக ஆய்வு செய்யமுடியாது.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நில அளவைத்துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி கூறும் போது, ‘தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுகிறது. சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும். அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *