சென்னை,ஏப்.30 மே மாத பங்கீடாக காவிரி ஆற்றில் 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கருநாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீரை கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங் களும் பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப் போது கூடி, காவிரி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. அந்த வகையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கூட்டமானது 49 முறை கூட்டப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50ஆவது கூட்டம் ஆணையத் தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று (29.4.2026) டில்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு சார்பாக ஆணைய உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில் நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு தலைவர் ரா.சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கருநாடகத்தின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கலந்து கொள்ளவில்லை, அவருக்கு பதிலாக அவரின் பிரதிநிதி கலந்து கொண்டார்.
கூட்டத்தில், கருநாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு சார்பாக உறுப்பினர், 28ஆம் தேதியின்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 42.397 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,503 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்து விடப்படுகிறது.
நடப்பு நீர்பாசன 2025-2026 ஆண்டின்படி கடந்த 2025 ஜூன் 1ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 174.500 டி.எம்.சிக்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப்பெற்ற நீரின் அளவு 326.945 டி.எம்.சி. ஆகும். இதனை சுட்டிக்காட்டி, கருநாடக உறுப்பினர், கருநாடகம் அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், கருநாடகம் அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண் டாட முடியாது என்றும் தமிழ்நாடு உறுப்பினரால் வலி யுறுத்தப்பட்டது.
கருநாடக அணைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீர் அளவான மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் வீதம் உச்ச நீதிமன்ற ஆணையின்படி கருநாடகா பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், மே மாத பங்கீடாக காவிரி ஆற்றில் 2.5 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கருநாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

