பொது இடங்களில் புகைப்பிடிப்பு ரூ.7.97 கோடி அபராதம் வசூல்! வரவேற்கத்தக்க செயல்பாடு

Viduthalai
4 Min Read

சென்னை, ஜூன் 5– பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறார்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அறிவிப்பதற்காக சாலைகளில் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகள், சிறார்களை குறிவைத்து, புகையிலைப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டா் தொலைவில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதி என்பதை குறிக்கும் வகையில் சாலையில் மஞ்சள் கோடுகள் வரையப்படுகின்றன.

89 சதவீத பள்ளிகளிலும், 87 சதவீத கல்லூரிகளும் புகையிலை இல்லாத கல்வி வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் இளம் வயதிலேயே புகையிலை பழக்கத்துக்கு அடிமையானால், மற்ற தீய பழக்கத்துக்கு ஆளாக நேரிடுவதுடன், வாய் புற்றுநோயால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு புகையிலை எதிர்ப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், புகையிலைப் பொருள்களை சிறார்க்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவா்களிடம், ரூ.200 முதல், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதன்படி, தொடர்ந்து தவறு செய்பவா்கள் மீது, குற்றவியல் வழக்கு பதிவு செய்து, ஓராண்டு முதல் அய்ந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

கட்டணமில்லாப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஜூன் 5- தமிழ்நாடு அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா்.

சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாட்டுப் பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை சென்னை மாநகர விடியல் பயண பேருந்துகளில் 139 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை 139 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் 3.74 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 2024ஆம் ஆண்டு மே மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளை விட 21 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 12.06 லட்சம் பெண்கள் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு விற்பனை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது

சென்னை, ஜூன் 5- உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது. வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://foscos.gov.in-ல் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற வேண்டும். உணவக ஊழியர்களுக்கு டைபாய்டு, மஞ்சள் காமாலை தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெயை
ஒரு முறையே பயன்படுத்த வேண்டும்

உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈ, பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும். உணவு எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்.

செய்தித்தாளில் உணவுப்பொருளை பரிமாறக்கூடாது

செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவு நேரடியாக படும் வகையில் பரிமாறவோ பொட்டலமிடவோ கூடாது. உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும். சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. உணவு பரிமாற வாழை இலை, பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *