பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

viduthalai
2 Min Read

 

சென்னை, ஜூன் 4– பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது.

விடைத்தாள் நகல் வெளியீடு

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறு கூட்டல்

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு
நீர்வரத்து அதிகரிப்பு

டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர், ஜூன் 4- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து இன்று காலை (ஜூன் 4) 113 அடியை நெருங்கியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பை யாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (3.6.2025) காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,017 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 5,908 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வினாடிக்கு 6,234 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.71 அடியிலிருந்து 113 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 82.74 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *