சென்னை, ஜூன் 4– இளைஞர்கள், மாணவர்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 7 ‘சைபர்’ குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒரு பெண் குற்றவாளி என்று தெரியவந்துள் ளது.
இணையதள மோசடிகள்
தற்போது நாடு முழுவதும் இணையதளங்கள் வாயிலாக ‘சைபர்’ குற்றவாளிகள் நடத்தும் நூதன முறையிலான மோசடி சம்பவங்கள் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளன. கத்தியின்றி, ரத்தமின்றி இணையதளங்கள் வாயிலாக தகவல்கள் அனுப்பி இது போன்ற மோசடி குற்றவாளிகள் எளிதாக லட்சங்களையும், கோடிகளையும் அள்ளிவிடுகிறார்கள்.
வங்கி கணக்குகள் வாயி லாகவே இந்த மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. சமீபகாலமாக தமிழ்நாடு ‘சைபர்’ குற்றப்பிரிவு காவல்துறைக்கு குறிப்பாக சில மோசடி சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகார்கள், திருமண இணையதளங்கள் வாயிலாக இளைஞர்களை ஏமாற்றி நடந்த மோசடி, அரசு கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக மாணவர்களை ஏமாற்றி நடந்த மோசடி, வங்கி அதிகாரிகளை போல பேசி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு ரகசியங்களை பெற்று அதன்மூலம் நடந்த மோசடிகள் தொடர்பாகத்தான் நிறைய புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு ‘சைபர்’ கிரைம் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப்மிட்டல் தீவிர விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
5 மாநில குற்றவாளிகள்
இதுதொடர்பாக நடந்த விசாரணையில் டில்லி, ஜார்கண்ட், உத்தரகாண்ட், அசாம் போன்ற 5 மாநிலங்களை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் தான் மேற்கண்ட இணையதள மோசடி லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த குற்றவாளிகளை கைது செய்ய ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்ற பெயரில் மேற்கண்ட5 மாநிலங்களிலும் அதிரடி நடவடிக்கை எடுக்க 5 தனிப்படை காவல் துறையினர் களத்தில் இறக்கப் பட்டனர்.
5 தனிப்படை காவல் துறையினரும் மேற்கண்ட 5 மாநிலங்களின் காவல் துறையினருடன் இணைந்து அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட் டையில் ஈடுப்பட்டனர்.
காவல்துறை விசாரணையில் மேற்கண்ட 5 மாநிலங்களை சேர்ந்த 7 ‘சைபர்’ குற்றவாளிகள் தமிழ்நாடு உள்பட நாடு முழுக்க பல்வேறு மோசடி லீலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்த 7 குற்றவாளிகளும் அந்த 5 மாநிலங்களிலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கலக்கி வந்தனர்.
7 பேரும் கைது
குறிப்பிட்ட 7 ‘சைபர்’ கிரைம் குற்றவாளிகளையும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தனிப்படை காவல்துறை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:-
- முகமது தாவூத் (வயது 21) 2. முகமது வாசிம் (34) (இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்), 3. பங்கஜ் குமார் (40) – ஜார்கண்ட் மாநிலம், 4.ஹிட்டு (30) – அசாம் மாநிலம், 5. ரஞ்சன் வந்நாத் (51) – அசாம் மாநிலம், 6. பிரீத்தி நிக்கோலஸ் (30), 7. மேஷக் (19) (இருவரும் டில்லியை சேர்ந்தவர்கள்)
இவர்கள் 7 பேர் மீதும் தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்கள் சென்னை அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை நடத் தப்பட்டது. கைதான டில்லியை சேர்ந்த பிரீத்தி நிக்கோலஸ் என்ற பெண் ‘சைபர்’ குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார்.
இவர்கள் 7 பேர் மீதும் தனித்தனி மோசடி குற்றவழக்குகள் உள் ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 7 பேரையும் கைது. செய்த தனிப்படை காவல்துறையினருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.