டில்லியில் 370-க்கும் மேற்பட்ட தமிழர்களின் குடியிருப்புகள் இடித்து தரை மட்டம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு அரசு

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூன் 3– உயர் நீதிமன்ற உத்தரவின்படி டில்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்புகள் 1.6.2025 அன்று அகற்றப்பட்டது. சுமார் 370க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இக்குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்குத் தேவையான அனைத்து தீர்வுகளும் தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு டில்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியேறினர். சென்னை, விழுப்புரம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர். குடியிருப்பின் மய்யப் பகுதியில் முருகன் கோயிலை கட்டி வழிபட்டு வந்தனர்.

மதராசி கேம்ப் வழியாக யமுனை நதியின் பிரதான மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் டில்லியின் ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதாக டில்லி பொதுப் பணித் துறை குற்றம் சாட்டியது. மதராசி கேம்ப் பகுதியில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று டில்லி பொதுப் பணித் துறை சார்பில் அறிவிக்கை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மதராசி கேம்ப் பகுதி மக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி மதராசி கேம்ப் பகுதியில் மே 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் வீடுகளில் உள்ள பொருட்களை காலி செய்ய வேண்டும். ஜூன் 1ஆம் தேதி முதல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டில்லி பொதுப் பணித் துறை அதிகாரிகள், காவல் துறை உதவியுடன் மதராசி கேம்ப் பகுதியில் வசித்தவர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். அடுத்த கட்டமாக மதராசி கேம்ப் பகுதியில் உள்ள 370க்கும் மேற்பட்ட வீடுகள் 1.6.2025 அன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இதில் 189 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 40 கி.மீ. தொலைவில் உள்ள நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. குடிநீர், மின்சார வசதிகூட இல்லை. அந்த இடத்தில் எப்படி வாழ முடியும்?

சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம், வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்?. டில்லியில் ஆளும் பாஜக அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டில்லி ஊரக குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூறும்போது, “டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இங்கு வசித்தவர்களில் 189 குடும்பங்களிடம் மட்டுமே போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தனர்.

தென்கிழக்கு டில்லி ஆட்சியர் அனில் பங்கா கூறும்போது, “மதராசி கேம்ப் பகுதியில் உள்ள பாராபுலா கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மழை காலங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி முறைப்படி அறிவிக்கை வழங்கப்பட்டு, மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்ட பிறகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு உதவிக்கரம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு அருகில் தமிழர்கள் வசித்த மதராசி கேம்ப் பகுதியில் 370 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அலுவலகம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதராசி கேம்ப் பகுதியில் வசித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும்.

வீடுகளை இழந்த மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்படும். சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *