எதிலும் மதவாதக் கண்ணோட்டமா

viduthalai
3 Min Read

மகாராட்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog), ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை கால்நடை சந்தைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக மாடுகளை வெட்டுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று கூறினாலும் அரசு உண்மையில் ஜூன் 7, 2025 அன்று வரவிருக்கும் பக்ரீத் விழாவை இஸ்லாமியர்கள் கொண்டாடவிடக்கூடாது என்று மோசமான நோக்கத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையானது  விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்வதாகும்.

இந்தத் தடை மாடுகள் மட்டுமின்றி, ஆடுகள் மற்றும் பிற விலங்குகளின் விற்பனையையும் பாதிக்கிறது.

ஆனால் பசுவதையைத் தடுப்பு என்ற ஆர்.எஸ்.எஸின் கொள்கையே இதன் முக்கிய நோக்கம் என்றும் கோசேவா ஆயோக் தெளிவுபடுத்தியுள்ளது.

சந்தைகள் மூடப்படுவதால், ஆடு, எருமை போன்ற தடை செய்யப்படாத விலங்குகளின் வர்த்தகமும் நின்றுவிடும் என்றும், இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரின் அன்றாட வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது

மகாராட்டிர அரசின் இந்த நடவடிக்கையானது மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், கருநாடகா, ஆந்திரா விவசாயிகளை கடுமையாக பாதிக்கச் செய்வதாகும்.

இது தொடர்பாக ராய்ச்சூரைச் சேர்ந்த அஞ்சனா பிதார் என்பவர் கூறும் போது கடந்த ஆண்டு நோயினால் என் மந்தையில் இருந்த 47 ஆடுகள் இறந்தன.

இதனால் எனக்குப் பெரும் இழப்பு! இந்த இழப்பை ஈடுகட்ட மும்பைக்கு ஆடுகளைக் கொண்டு சென்று விற்பனை செய்து அதன் மூலம் கடன் மற்றும் மகளின் திருமணத்தை முடிக்கலாம் என்று இருந்தேன்.

இம்முறை ஆடுகள் நன்கு வளர்ந்துள்ளதால் குறைந்த பட்சம் 8  லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். வாடகை உள்ளிட்ட அனைத்தும் போக 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று இருந்த நிலையில், மகாராட்டிரா முழுவதும் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் உள்ளூர் சந்தையில் விற்கும் நிலைக்கும் ஆளாகி உள்ளோம், உள்ளூர் சந்தையில் இரண்டு லட்சம்  ரூபாய்கூடக் கிடைக்காது. மேலும் உள்ளூர் சந்தையில் முகவர்களின் ஆதிக்கம் உள்ளதால் அவர்கள் கொடுக்கும் பணத்தைத்தான் நாங்கள் வாங்க வேண்டும்; நாங்களாக சந்தையில் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாது என்றும் புலம்பினார்.

இவர் மட்டுமல்ல இவரைப்போன்று  ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று மாநிலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை கோவண்டியில் உள்ள தேவ்னார் ஆட்டுச்சந்தை மற்றும் நவிமும்பையில் உள்ள எபிஎம்பி சந்தை இரண்டும் ஆசியாவிலேயே மிகவும் பெரிய இறைச்சி வெட்டும் தளமாகும்.

மகாராட்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இந்த இரண்டு சந்தைகள் மூலம் மகாராட்டிரா அரசுக்குப் பெரும் வருவாய் ஆண்டுதோறும் கிடைத்து வந்தது, சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் விவசாயிகள் உள்ளூர் முகவர்கள் மூலமாக ஆடுகளை விற்கத்துவங்கினர். இதனால் விவசாயிகளுக்கும் மகாராட்டிரா மாநில அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் இஸ்லாமிய வெறுப்பு காரணமாக மகாராட்டிராவை ஆளும் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு எடுத்த இந்த நடவடிக்கையால் ஏழை ஹிந்து விவசாயிகள்கூடக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத வெறுப்பு என்பது எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்களைப் பாதிக்கச் செய்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதில்தான் மதவாத மூக்கை நுழைப்பது என்பதில் வரை முறையே இல்லாமல் சங்பரிவார், பிஜேபி கும்பல், அவற்றின் ஆட்சி அதிகாரம் தலைகால் புரியாமல் ‘அம்மண ஆட்டம்’ போடுவது வெட்கக் கேடானது!

மக்களாட்சி மலர இந்த மதவாத சக்திகளுக்கு முடிவு கட்டுவது வெகு மக்களின் கடமையாகும்.

ஊடகங்களும் வெறும் வியாபாரக் கண்ணோட்டத் தோடு முடங்கிப் போகாமல் மக்கள் நலனில் அக்கறை யோடு செயல்படட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *