மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களும் – முதலமைச்சரின் சங்கநாதமும் எழுச்சி மிக்கவை!
எதிரிகளால் உடைக்கப்படவே முடியாத கொள்கைக் கூட்டணி தி.மு.க. தலைமையில்!
திராவிடத்தை மீண்டும் அரியணை ஏற்றி மான வாழ்வு உரிமை ஆட்சி பெற அணிவகுப்போம்!
தி.மு.க. தலைமை யில் அமைந்துள்ள கூட்டணி கொள்கைக் கூட்டணி, எதிரிகளால் உடைக்கப்பட முடியாத கூட்டணி; திராவிடத்தை மீண்டும் அரியணை ஏற்றுவோம் – இதுவே முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் பிறந்த நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழி! என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு::
மதுரையில் ஓர் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வெகுசிறப்புடன் நடைபெற்று ‘வரலாறு‘ படைத்துள்ளது!
1946 இல், இதே மதுரையில்தான்…
எந்த மதுரையில், 1946 இல் ‘‘கருப்புச் சட்டை மாநாடு’’ என்ற திராவிட இயக்கத்தின் மாநாடு வைகை மண்ணில் நடைபெற்றபோது, சில ஆரிய சக்திகளாலும், கூலி ஏவல் படைகளாலும் மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தி, கழகத்தவர்மீது அபாண்ட பழி சுமத்தி, கடும் எதிர்ப்புக் காட்டிய அதே மதுரையில், தி.மு.க.வின் பொதுக்குழு சிறப்புடன் நடைபெற்றுள்ளது (1.6.2025). மாநகர ஆட்சியிலிருந்து, மகத்தான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான மாட்சியும் மீண்டும் வெற்றி பெற்று வரவிருக்கிறது என்பதை உறுதி செய்யும் செயல் வீரர்களின் பாடி வீட்டின் பாசறை முழக்கமாக, தி.மு.க.வின் ஆற்றல்மிகு இன்றைய தலைவரின் பேருரை, பெருமுழக்க வெற்றிக்கான முன்னோடி வீர சபத – வெற்றிச் சங்காக ஓங்கி ஒலித்து, தி.மு.க. செயல்வீரர்களைத் தேர்தல் களத்தில் நேர்த்தியாக செயல்படத் தூண்டும் எழுச்சி உரையாக அமைந்தது!
ஏகடியம் பேசி, கொள்கை எதிரிகளிடம் தங்களது கட்சியை அடமானம் வைத்த கட்சிகளும், தலைக்கனத்தில் தன்னி கரில்லாதவர்களும், அரிதார அரசியல் ஆசையாளர்களும், அவ்வப்போது மாறி மாறி– ஏல அரசியல் காரணமாக இடமாறிகளும் இவ்வாட்சியை மீண்டும் வெற்றி பெற விடக் கூடாது என்பதற்காக தி.மு.க. என்ற கற்பாறையை உடைக்க இந்த ‘‘கண்ணாடி கதவுகள்’’ சவால் விடுக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர்
பிறந்த நாளில் உறுதியேற்போம்!
நாளை (3.6.2025) நமது முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள். இந்த நாளையொட்டி மதுரையில் தி.மு.க.வின் பொதுக்குழு அரிய தீர்மானங்கள், செயல் திட்டங்களை வகுத்து, வாகை சூடத் துடிப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மானமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாளில், அவர் சிலைக்கு உண்மையான மாலை அணிவிப்பது என்பது – வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி மாலை சூடுவதேயாகும். உழைப்போம், மக்களை சந்திப்போம், சாதனைகளை எடுத்துரைப்போம் – வெற்றி நமதே!
பெரியார் பிறந்த திராவிட மண்ணை ‘ஷா’க்கள் கைப்பற்ற முடியாது!
தி.மு.க.வின் ஆளுமை நிறைந்த அருமைத் தலைமை ‘‘இந்த மண் ‘திராவிட மண்‘தான் – பெரியார் மண்தான் – இங்கே எந்த ‘ஷா’க்கள் வந்தாலும், கைப்பற்றி ஆள முடியாது’’ என்று பிரகடனப்படுத்தியுள்ளார்!
அது ஆணவ எக்காளமல்ல; ஆழமும், அடக்கமும், ஆளுமை வெற்றி இலக்கணமும் கைக்கொண்டு, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கென்ற கொள்கைகளான சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி போன்றவற்றில் சற்றும் சமரசம் செய்யாது, பாதுகாப்புக்காகப் பல்லிளித்து கொத்தடிமையாகிட ஒருபோதும் ஒப்பந்தம் போடாத அரசு என்பதை தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமைமிகு முதலமைச்சருமான நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நேற்று (1.6.2025) தி.மு.க.வின் தொடர் வெற்றியின் மூல பலத்தை நன்கு தெளிவுபடுத்தினார்.
எதிரிகளால் உடைக்கப்படவே முடியாதது –
தி.மு.க. தலைமையிலான கூட்டணி!
தி.மு.க. தலைமையிலான கூட்டணி!
- முதலில் மக்கள் நலத்தை முன்னிறுத்திடும், வெற்றி கரமான திட்டங்களே மக்கள் பலம் இவ்வாட்சிக்கு!
- கொள்கைக் கூட்டணியே தி.மு.க. தலைமையில் கருவாகி, உருவாகி, இன்று திருவாகி வெற்றிக் கனிகளைத் தொடர்ந்து பறிக்க, எந்தவித நப்பாசைகளுக்கும் பலியாகாமல், பலவீனமில்லா கொள்கைகளைக் கொண்ட, எதிரிகளால் உடைக்க முடியாத உறுதியான இரும்புச் சங்கிலி போன்றதாகும்!
அவர்களை அரவணைத்து, ‘‘களத்தில் நாங்கள் பலரல்ல; ஒரே உணர்வு கொண்ட லட்சிய அணியினர் – மதவாத, ஜாதிவாத, பண்பாட்டுப் படையெடுப்பின் மனுவாத கொள்கைக் கும்பலின் ஆட்சிக் கனவுக்குச் சற்றும் இடந்தர விடமாட்டோம்!
‘‘தம் கொள்கைகளை ‘‘குத்தகை’’ விடுவோர் அல்ல நாம், திடச் சித்த கடமை வீரர்கள்’’ என்பதை நன்கு விளக்கி உள்ளார்.
உலகறிய ஒப்பற்ற உழைப்பும், எவரிடத்திலும், அன்பும், பாசமும் பொழிய, அடக்கத்தினை உள்ளடக்கிய ஆற்றல் முதலமைச்சரின் தனித்த பண்பும்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
‘பதவி என்பது மேல் துண்டு; கொள்கை என்பது வேட்டி’
என்று அண்ணா சொன்னதை, முத்தமிழறிஞர் கலைஞர் நிரூபித்தார்; அந்த செம்மொழி நாயகர் வழங்கிய கொள்கைகளை 100–க்கு 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தி, எதிர்நீச்சல் போட்டு, வாகை சூடும் தலைவராக இருக்கிறார் – இன்றைய நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மதுரையில் தி.மு.க. தலைவரின் சங்கநாதம்!
மதுரை பொதுக்குழுவில் முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சங்கநாதம் செயல்வடிவம் பெற தூண்டுகோலாகும். அவரது அறிவுரை, ‘‘இளைஞர்களுக்கு இடம்தந்து ஊக்கப்படுத்தி, புதிய தலைமுறைகளுக்கு ஆளுமைப் பயிற்சிக் களத்தை ஆயத்தப்படுத்துவீர்’’ என்பது அருமையான அனுபவ முத்திரையாகும்.
அவரே, அதற்குத் தக்கதொரு தனித்த சாட்சியமும் ஆகும்!
எனவே, நாம் எதிர்ப்பது ஆர்.எஸ்.எஸ். – ஆரியத்தை!
பதிலடி தர களமாடி கடமை ஆற்றத் தயாராக உள்ளது, திராவிட மண்ணின் தனித்தன்மை காக்க உறுதி பூண்ட திராவிடம்!
இருபெரும் கொள்கை மோதல் – இதில் வெறும் கட்சிப் பார்வை கூடாது! களப் பணியில் கவனம் மிகத் தேவை! தேவை!!
வரவிருப்பது வெறும் தேர்தல் அல்ல!
மானுட உரிமை, மக்களாட்சி, சமத்துவம், சமூகநீதிப் பாதுகாப்பு அரண் திராவிடத்தில்தான் உண்டு என்று தெருவெங்கும் முழங்குவோம்!
திராவிடத்தை மீண்டும் அரியணை ஏற்றி, மான வாழ்வு, உரிமை ஆட்சி பெற அணிவகுப்போம்!
வரவிருப்பது வெறும் தேர்தல் அல்ல!
கொள்கைப் போர்! மானப் போர்!
உரிமைப் போர் என்பதை மறவாதீர்!
சென்னை
2.6.2025
தலைவர்,
திராவிடர் கழகம்