நீதிமன்ற உத்தரவையும் மீறி மரம் வெட்டியது ஏன்? டில்லி அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம் அதிக மரங்கள் நட வேண்டும் என உத்தரவு

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 31– ராஜஸ் தான், அரியானாவை ஒட்டி, டில்லியின் ஆரவல்லி வனப்பகுதி அமைந்துள்ளது. ரிட்ஜ் என்று அழைக்கப்படும் இது, டில்லியின் நுரையீரல் என்று கூறப்படுகிறது. வனப்பகுதிகளும், மேடான மலைப் பகுதியுடன் இது அமைந்துள்ளது.

இந்நிலையில், டில்லியின் இந்த ரிட்ஜ் பகுதியை ஒட்டி யுள்ள இடங்களில், சாலை விரி வாக்கத்துக்காக கடந்தாண்டில், 1,000த்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

முறையான முன் அனுமதி பெறாமல் இந்த மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டி.டி.ஏ., எனப்படும் டில்லி வளர்ச்சிக் குழுமம், தாமதமாக மனு தாக்கல் செய்ததாகக் கூறி, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, டில்லி துணை நிலை ஆளுநரும், டி.டி.ஏ., தலைவருமான வி.கே.சக்சேனா, டி.டி.ஏ., துணைத் தலைவ ரான, அய்.ஏ.எஸ்., அதிகாரி சுபாஷிஷ் பாண்டேவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 1996 மற்றும் கடந்தாண்டு மார்ச் 4இல் பிறப்பித்த உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி, மரங்கள் வெட்டப்பட்டதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விஷயத்தில் டி.டி.ஏ., நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது உறுதியாகிறது. அதே நேரத்தில், துணை நிலை ஆளுநர் மற்றும் டி.டி.ஏ., துணைத் தலைவர் மீது நடவடிக்கை தேவையில்லை. இந்த விஷயத்தில், நிர்வாக குழப்படி செய்து, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய டி.டி.ஏ., அதிகாரிகளுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, அதே பகுதியில் அதிகளவில் மரங்கள் நட வேண்டும்.

இந்த சாலை விரிவாக்கத்தால் பயனடைந்தவர்களிடம் இருந்து, இதற்கான தொகையை, ஒரே தவணையில் கட்டணமாக வசூலிக்க வேண்டும். இவற்றை மேற்பார்வையிட மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப் படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *