புதுடில்லி, மே 31 உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று (30.5.2025) பதவி யேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 3 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம், ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அந்தவகையில் கருநாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துர்கர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு கடந்த 26 ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.
நீதிபதிகள் என்.வி.அஞ்சரியா,
விஜய் பிஸ்னோய், சந்துர்கர்
அதன்படி மேற்படி 3 நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 29.5.2025 அன்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி கள் என்.வி.அஞ்சரியா, விஜய் பிஸ்னோய், சந்துர்கர் ஆகிய 3 பேரும் நேற்று (30.5.2025) உச்சநீதிமன்ற நீதிபதி களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகள் 3 பேருக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். புதிதாக பதவியேற்றுள்ள 3 பேரையும் சேர்த்து, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தனது முழு பலத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் எட்டியுள்ளது.