புதுடில்லி, மே 29- குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்புக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று (28.5.2025) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதார விலை உயர்வு
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று (28.5.2025) நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டன. அதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
குறுவைப் பயிர்களுக்கு 2025-2026- குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகரிப்பு
இதன்படி நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.69 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு இனி ரூ.2,369 கிடைக்கும். இதில் ஏ கிரேடு நெல்லுக்கு ரூ.2,389 கிடைக்கும்.
ராகி விலை ரூ.596 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.4,886 கிடைக்கும். பருத்திக்கு ரூ.589 உயர்வு ஏற்பட்டு குவிண்டால் விலை தரம் வாரியாக மற்றும் ரூ 7710 மற்றும் மற்றும் ரூ 8110 ஆக அதிகரித்து உள்ளது.
துவரம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டைவிட ரூ.450 அதிகரித்துள்ளது. பாசிப்பயிறுக்கு ரூ.86 அதிகரித்து ரூ.8,768 ஆக்கப்பட்டு உள்ளது. உளுந்துக்கு ரூ.400 உயர்த்தி ரூ.7,800 வழங்கப்படுகிறது.
எண்ணெய் வித்துக்களை பொறுத்தவரை நிலக்கடலைக்கு
ரூ.480-ம், சூரியகாந்தி விதைக்கு
ரூ.441-ம், சோயா பீன்சுக்கு ரூ.436-ம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன்மூலம் முறையே ரூ.7,263, ரூ.7,721, ரூ.5,328 வழங்கப்படும். இந்த மாற்றங்கள் வருகிற குறுவைப் பருவத்தில் இருந்து அமலாக்கப்படும்.
வட்டி மானிய திட்டம்
இதேபோல் விவசாயிகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தை தொடரவும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு உள்ள விவசாயிகள் இந்ததிட்டத்தில் பயன்பெறுவார்கள்.
7 சதவீத வட்டி வீதத்தில் ரூ.3லட்சம் வரை குறுகியகால கடன்களை விவசாயிகள் பெறலாம். கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் கூடுதலாக 3 சதவீத ஊக்கத்தொகையும் கிடைக்கிறது.
இந்த கடன் தொகை கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ரூ.10.05 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ரயில் பாதைகள்
இதுதவிர மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் நாக்டா இடையே 3ஆவது மற்றும் 4ஆவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல மராட்டிய மாநிலத்தில் வர்தாவுக்கும், பலார்ஷாவுக்கும் இடையே 4ஆவது பாதை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள் ளது. இவற்றின் மொத்த மதிப் பீட்டுச் செலவு ரூ.3,399 கோடி ஆகும்.
மேலும் ஆந்திரப்பிரதேசத்தில் பாட்வெல் மற்றும் நெல்லூர் இடையே ரூ.3,653.10 கோடி செலவில் 108 கி.மீ. தூரத்துக்கு நான்குவழி சாலை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விசாகப்பட்டினம்-சென்னை, அய்தராபாத்-பெங்களூரு, சென்னை-பெங்களூரு ஆகிய தொழில் வழித்தடங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்