இன்று உலக மாதவிடாய் சுகாதார நாள் பெண்கள் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுரை

Viduthalai
2 Min Read

சென்னை, மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாள் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி (இன்று) கடைப் பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள தயக்கத்தைப் போக்குவதற்கும், தவறானப் புரிதல்களைக்களையவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் 2013-இல் மாதவிடாய் நாள் தொடங்கப்பட்டு, 2014 முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுகாதார முறை

இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார நாளின் கருப்பொருள் ‘மாதவிடாய் விழிப்புணர்வுமிக்க உலகம்’ என்பதாகும்.

மாதவிடாய் சுகாதார நாள் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

பெண்களுக்கு மாதவிடாய் என்பது 28 முதல் 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் நடைபெறக்கூடியது. மாதவிடாய் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுகாதாரம் முக்கியம் என்பதால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக்காலத்தில் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ள பழைய துணிகளை கிழித்துப் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் சானிட்டரி நாப்கின்,டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது.

துணிகளைப் பயன்படுத்துவது சுகாதாரமற்ற முறையாகும். இதனால், தொற்றுப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மாதவிடாய் காலத்தில் யாரும் துணிகளைப் பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் முக்கியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உடற்பயிற்சி

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, கை, கால்களில் வலிபோன்ற உடல் உபாதைகள் இருக்கும். அதற்காக பயப்பட வேண்டாம். மாதவிடாய் காலம் முடிந்தவுடன் சரியாகி விடும். அதிகமான வலி இருந்தால் மருத்துவரை அணுகலாம். வழக்கமாக சாப்பிடும் உணவுகளை சாப்பிடலாம். அதில் எவ்விதக் கட்டுப் பாடும் இல்லை. சிறிய அளவிலான உடற் பயிற்சி மேற்கொள்ளலாம். யோகா செய்யலாம். வழக்கமாக மேற்கொள்ளும் செயல்பாடுகளை மாற்ற வேண்டியதில்லை.

அந்தக்காலத்தில் மாதவிடாய் காலத்தில் வலி இருப்பதாலும், சோர்வாகக் காணப்படுவார்கள் என்பதாலும், எந்த வேலையையும் செய்ய விடாமல் தனிமைப்படுத்திகொள்ளச் சொன்னார்கள் இப்போது அப்படியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *