பொள்ளாச்சி வால்பாறையில் கடும் மழை பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் நொறுங்கின – கூரைகள் பறந்தன

Viduthalai
2 Min Read

பொள்ளாச்சி, மே. 28– பொள்ளாச்சி, வால்பாறையில் தொடரும் கனமழையால் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் 2 இடங்களில் வீடுகள் இடிந்தன. காற்றில் மேற்கூரைகள் பறந்தன.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் நேற்று 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை மலைப்பாதையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நெகமம் பகுதியில் பெய்த மழை காரணமாக கோவில் பாளையம் செல்லும் சாலையில் பழமையான தேக்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பமும் உடைந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.

வீடுகள் இடிந்து விழுந்தன

இது போன்றே அருகே என் சந்திராபுரம் ஆதி திராவிடர் காலனியில் ஒரு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. மேலும் ஆனைமலை அருகே சேத்துமடை அண்ணாநகர் மலைக்கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதால் நல் வாய்ப்பாக தப்பினர். தொடர் மழையால் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையும் நிரம்பி வருகிறது.

வால்பாறையில் சூறாவளியுடன் மழை

வால்பாறை பகுதியில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் இரவு, பகலாக கனமழையாக பெய்து வருகிறது.  நேற்று பெய்த மழையில் வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் மரங்கள் விழுந்தன. வால்பாறை-சோலையாறு அணை சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சோலையாறு நகர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ஒரு வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *