பாடியில் காமு அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் படங்கள் திறப்பு துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வீரவணக்க உரை!

viduthalai
2 Min Read

ஆவடி, மே 27. ஆவடி மாவட்டம் பாடியில் நடை பெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் கலந்து கொண்டு படங்களைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசனின் தாய் காமு அம்மாள், தமக்கை குண்டலகேசி ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 11.05.2025 ஞாயிறு அன்று பாடி மூர்த்தி நகர் சிவசக்தி திரையரங்கம் எதிரில் உள்ள ஹேப்பி அரங்கில் மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னையர் நாளை முன்னிறுத்தி காமு.அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து, அவர்களின் அருமை பெருமைகளை நினைவு கூர்வது போல் நிகழ்ச்சியை அமைத்திருந்தனர்.

நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் க.இளவரசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வளையாபதி சுந்தரேசன் தலைமையேற்று  காமு அம்மாள், குண்டலகேசி நினைவு மலரை வெளியிட்டு உரையாற்றினார். மலரைப் பெற்றுக்கொண்ட கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இறுதியில் சிறப்புரை மற்றும் வீரவணக்க உரை ஆற்றினார். கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், தமிழ் உதயா, தமிழ்க்கனல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.  நிகழ்ச்சியை கொரட்டூர் தங்கரவி ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார். க.இளவரசனின் பேரன் தமிழினியன் தனது பாட்டி காமு அம்மாள் பற்றி கவிதை ஒன்றை வாசித்தார். இறுதியில் தி.குறளரசி நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழர்களின்
அடையாளம் எது?

துணைப் பொதுச்செயலாளர் தனது வீரவணக்க உரையில், ’தஞ்சாவூர் சித்திரக்குடியைச் சேர்ந்த பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் இராமநாதன் அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த கொள்கைக் குடும்பத்தார் தான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதை பெருமிதத்தோடு நினைவூட்டினார். அத்துடன் புரட்சிக்கவிஞர் மற்றும் புலவர் இராமநாதன் பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இளவரசன் குடும்பத்தார் அனைவரின் பெயர்களும் நல்ல தமிழில் இருப்பதை சுட்டிக்காட்டி, ’இதுதான் தமிழர்களாகிய நமது அடையாளம்’ என்றும் பாராட்டினார். தொடர்ந்து ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான திராவிட பண்பாட்டில் படத்திறப்பு நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதே நிகழ்ச்சி இதற்கு முன்பு எப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களுடன் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்ட, சுடுகாட்டுக்கு தீச் சட்டியை கொண்டு செல்லும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, ’அன்றைய காலகட்டத்தில் தீச்சட்டி யை கண்டுபிடித்தவன் அறிவாளிதான். ஆனால், மின் சுடுகாடு வந்த பிறகும் அதே தீச் சட்டியை எதற்கென்று கூட தெரிந்துகொள்ளாமல் சடங்காகக் கொண்டு செல்வது முட்டாள்தனம் தான்’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், நினைவு மலரில் இருந்த காமு அம்மாளைப் பற்றிய தகவல்களை சுட்டிக்காட்டி, காமு அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் பெருமைகளை சிறப்பித்துப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, நாகர்கோயில் மணிமேகலை, பூவை தமிழ்ச்செல்வன், பட்டாபிராம் வேல்முருகன், பருத்திப்பட்டு சுந்தரராஜன்,  உடுமலை வடிவேல், திருமுல்லைவாயல் இரணியன், அம்பத்தூர் சிவக்குமார், ஜெயந்தி, அறிவுமதி, அன்புமதி, இராமலிங்கம், நாகம்மையார் நகர் ரவீந்திரன், அரும்பாக்கம் தாமோதரன், பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருட்டிணன், மணிமாறன் மற்றும் இளவரசன் இல்லத்தார், உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு உரைகளை கேட்டு பயன்பெற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *