கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார் அவர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்!

Viduthalai
4 Min Read

சென்னை, மே 27– சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகம் நூல் வெளியீட்டு அரங்கத்தில் 25.5.2025 மாலை 5 மணிக்கு கலைமாமணி – கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழா தொடக்கத்தில் ந.மா.முத்துக்கூத்தன் நினைவலைகள் ஒலி ஒளிப்படக்காட்சி திரையிடப்பட்டது. அவரின் இளமைக்கால ஒளிப்படங்கள், நாடகத்தில் பங்கேற்ற ஒளிப்படங்கள் இவற்றோடு அவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்களோடு வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக 25 நிமிடங்களில் காட்சிப்படுத்தினார்கள்.

தொடக்க உரையாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ந.மா.முத்துக்கூத்தன் திராவிடர் கழகத்திற்கு கலை வழியே ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் புகழ்ந்தார். ந.மா.முத்துக்கூத்தனின் பெயர்த்தி க.மணிமொழி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலைமாமணி கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு மலரை வெளியிட கவிஞர் ந.மா.முத்துக்கூத்தனின் கொள்ளுப் பெயர்த்திகள், பெயரன்கள் (7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்) மலரினைப் பெற்றுக் கொண்டனர்.

ந.மா.முத்துக்கூத்தன் எழுதிய கட்டைவிரல் என்ற நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி பெற்றுக் கொண்டார்.

நடிகர் நாசர் வெளியிட்ட ‘பதவிப் பிரமாணம்’ என்னும் நூல்

‘பதவிப்பிரமாணம்’ என்ற நூலை நடிகர் நாசர் வெளியிட அடையாறு மாணவர் நகலகம் சா.அ.சவுரிராசன் பெற்றுக் கொண்டார். நூல் பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக பொள்ளாச்சி உமாபதி உரையாற்றினார். அதில் முத்துக்கூத்தன் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றை நம் திராவிட மாடல் அரசு நாட்டுடமை ஆக்க வேண்டும். அதற்கு ஆசிரியர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கவிஞர் முத்துக்கூத்தனின் பெயரன்கள் 9 பேரும், பெயர்த்தி ஒருவரும் இணைந்து ரூபாய் பத்தாயிரம் பெரியார் உலகத்திற்கு நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் வாழ்த்துரை வழங்கினார். கலைமாமணி கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் பல்திறனையும் பாராட்டிப் புகழ்ந்து தான் நடத்திய வில்லுப்பாட்டுக்கு அவர் வில்லிசை கருவியை வழங்கிய பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், திரைப்பட நடிகருமான நாசர் வாழ்த்துரையில், தான் எழுதி தயாரித்த அவதாரம் திரைப்படத்தில் முத்துக்கூத்தன் அவர்களை அழைத்து ஒரு விடுகதை போட்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சிக்கு எழுதிக் கொடுக்க அழைத்ததையும், பெரிய ஆளுமையை சிறிய வேலைக்காக எப்படி அழைப்பது என தான் தயங்கியதையும் பின்னர் அவரோடு பழகிய பின் அடிக்கடி அழைத்துப் பேசியதையும் எடுத்துச் சொன்னார். நினைவலைகள் ஒளிப்படக் காட்சியைப் பார்த்தபின் ஒரு மகத்தான கலைஞனுக்குத் திரைப்படத்தில் வாய்ப்பளிக்காமல் தவறி விட்டோமே என்பதை வருத்தத்தோடு தெரிவித்தார்.

நிறைவாக முத்துக்கூத்தன் எழுதிய துணை நடிகர் துரைக்கண்ணு என்னும் நாடக நூலில் அவர் எழுதிய பகுத்தறிவு சிந்தனையுள்ள உரையாடலை வாசித்துக் காட்டி இந்த நூல் நாடகக் கலைஞர்கள் பற்றிய சிறந்த ஆவண நூல். இதை தென்னிந்திய நடிகர் சங்க நூலகத்திற்கு சில பிரதிகள் வாங்குவதாக குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.

விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு மு.கலைவாணன் பயனாடை அணிவித்தார்.

தமிழர் தலைவருக்கு கவிஞர் முத்துக்கூத்தனின் இணையர் மரகதம் அம்மையார் பயனாடை அணிவிக்க மேடைக்கு வந்தார். தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்விணையர் மோகனா அம்மா அவர்களை அழைத்து மரகதம் அம்மையாருக்கு சால்வை அணிவிக்கச் செய்த பின்னர் தான் பயனாடையைப் பெற்றுக் கொண்டார். மு.கலைவாணனுக்கும் அவர் இணையர் தமயந்திக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.

தமிழர் தலைவர் பாராட்டு

அதன்பின் தன் உரையைத் தொடங்கி, முத்துக்கூத்தன் எந்தச் சூழலிலும் கொள்கை உறுதியோடு வாழ்ந்தவர் என்றும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த பகுத்தறிவுவாதி என்றும் அவர் எழுதிய பாதை மாறாத பாட்டுப் பயணம் நூலில் உள்ள கலைவாணர் குறித்த செய்திகளையும் சுட்டிக்காட்டி தான் வெளியிட்ட மலர் சிறப்பாக இருப்பதையும், புத்தகங்கள் அருமையாக உள்ளதையும் அதற்காக குறுகிய காலத்தில் விரைந்து செயல்பட்ட கலைவாணனைப் பாராட்டிப் புகழ்ந்தார் தமிழர் தலைவர்.

கவிஞர் முத்துக்கூத்தன் வாழ்ந்த காட்டாங்குளத்தூரில் அவர் வீடு இருக்கும் தெருவுக்கு கவிஞர் முத்துக்கூத்தன் தெரு என அவரது நூற்றாண்டை முன்னிட்டு பெயர் வைத்து சிறப்பித்த மறைமலைநகர் நகர மன்றத் தலைவர் ஜெ.சண்முகத்திற்கு அனைவரின் சார்பாகவும், திராவிடர் கழகத்தின் சார்பாகவும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார்.

விழாவில் கொள்ளுப் பெயர்த்திகள் பெயரன்கள் நூற்றாண்டு மலர் பெற்றுக் கொண்டதையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மு.கலைவாணன் இடைஇடையே தன் தந்தையின் வாழ்வில் நடந்த – கொள்கை உறுதியோடு செயல்பட்ட செய்திகளை – நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டது சிறப்பாக இருந்தது. நிறைவாக கலைவாணன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *