குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்

Viduthalai
3 Min Read

புதுடில்லி, மே 24 ஆளுநர் விவகா ரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து திமுக எம்.பி. வில்சன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றுகிற அதிகாரத்திதல் தலையிடுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சட்டத்தை புரியாதவர்கள்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். சட்டப்பிரிவு 142-அய் அனைத்து வழக் குகளுக்கும் பயன்படுத்த மாட்டார்கள். பல்வேறு வழக்குகளில் அதனை பயன்படுத்த மறுத்துள்ளனர். ஆளுநர் வழக்கில் ஏன் சட்டப் பிரிவு 142அய் பயன்படுத்தியது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஆகும். ஆளுநர் எப்படி எல்லாம் வழக்கை இழுத் தடித்தார். எப்படி எல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்பட முயற்சித்தார் என்று வாதங்களை முன்வைத்தோம். ஆளுநரின் செயல்பாட்டை வைத்து தான் சட்டப்பிரிவு 142-அய் பயன்படுத் தினார்கள்.

அதிகாரத்தில் தலையீடா?

மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்புகிறபோது, அதனை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிகிறோம். அப்படி உள்ளபோது மீண்டும் எதற்காக ஆளுநரிடம் போய் நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினோம். ஆளுநர் அரசமைப்பு சட்டத்தை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அவமரியாதை செய்கிற போது, நாங்கள் ஆளுநரிடம் சென்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் படி மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுங்கள் என்றால் அவர் செய்யப்போவதில்லை என்று வாதிட்டோம். மசோதாவை 2ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு வருகிறபோது அரசமைப்பு சட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு நிகரானது என்று சொல்கிறார்கள். இதை புரி யாதவர்கள் தான் உச்சநீதிமன்றம் நாடாளுமன்ற அதிகாரத்தில் தலையி டுவதாக சொல்கிறார்கள்.

அப்படி கேள்வி எழுப்புபவர்களுக்கு நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்டப்பிரிவு 142அய் உச்சநீதிமன்றம் பயன்படுத்தினார்கள். உங்களுக்கு ஆதரவாக வந்தால் அது சரியானது என்கிறீர்கள். உங்களுக்கு எதிராக வந்தால் அது சட்டப்படி இல்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆளுநர், குடியரசுத் தலைவர் கையெழுத்து இல்லாமல், மசோதாக்கள் செல்லுபடியாகாது என்று சிலர் கூறுகிறார்கள். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் 9 மாநில அரசுகளை கலைத்தார்கள். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறபோது சில அரசுகளை கவிழ்த்தது சரியில்லை. மீண்டும் அந்த அரசுகளை அமைக்க உத்தரவிடுகிறார்கள். அதேபோல், உத்தரகாண்டில் ஆளுநர் அறிக்கையால் கலைக்கப்பட்ட அரசை உச்சநீதிமன்றம் அமைக்கிறது. இந்த உத்தரவுகளுக்கு எல்லாம் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் இருந்ததா? இதை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்கள். அப்போது எந்த அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குகிறது? அவர்கள் சொல்வதை பார்த்தால் உச்சநீதிமன்றம் ஏதோ டம்மியான அமைப்பு போன்று சொல்கிறார்கள்.

சிறப்பு அதிகாரம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் 142வது சட்டப்பிரிவு என்பது, முழுமையான நீதி கிடைக்காத போது அதை நிறைவேற்ற உச்சநீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு எதிரான நிலைப்பாட்டை எடுக்க காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது. பாஜக ஆளாத மாநில அரசுகளூக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

ஆளுநர் இவ்வளவு நாளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மிரட்டிக் கொண்டிருந்தது போய்விட்டது. அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் மக்களை எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கம் கோரியுள்ளனர். இது நிலைக்க தக்கது அல்ல. 2002 குஜராத் தொடர்பான மசோதா வருகிறபோது குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. 1993 காவிரி தொடர்பான வழக்கிலும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவரின் கேள்விக்கு பதில் அளித்தாலும்,  தீர்ப்பில் மாற்றம் வராது. இது ஒன்றிய அரசுக்கு தெரிந்தும் இவ்வாறு செய்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *