ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1: தங்க நகைக்கடன் பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் செயல் என்பதால், இதுகுறித்து ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்யுமா?

– ஜமுனா வெங்கட், ஆரணி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 1: ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற பலரையும் பாதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள நகைக்கடன் கட்டுப்பாடுகள். அவற்றை ரத்து செய்வது மிகவும் முக்கியம். “எருதின் புண் காக்கை அறியுமா?”

****

கேள்வி 2: கோவில்களில் தினமும் ஒருவேளை பூஜையாவது நடத்தப்பட வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன் என்பவர், ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அவதிப்படும் ஏழை எளிய மக்களைப் பற்றி சிந்திக்க முன்வருவாரா?

– வே.பெருமாள்சாமி, விழுப்புரம்.

பதில் 2: நம் விசித்திரங்களில் இதுவும் முக்கியம். ஆறுகால பூஜை முதற்கொண்டு நடத்தப்படும் நாட்டில் – உண்ணாத, இல்லாத கடவுள்களுக்குக் காட்டப்படும் பரிவு, கரிசனம் உயிர் உள்ள மனிதர்களுக்காக எப்போது வருமோ? மகா வெட்கக்கேடு!

****

கேள்வி 3: ஆசிரியர்களிடையே அறிவியல் மனப்பான்மையை  வளர்த்தெடுக்கும் வகையில்,  திராவிடர் கழகம் ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுக்க முன்வருமா?

– இராசு.மணி, காட்பாடி.

பதில் 3: பகுத்தறிவுப் பயிற்சி வகுப்புகள்  எங்கெங்கும் – பற்பல முக்கிய கல்வி நகர்களிலும் பரவிடும் வகையில் நடத்திட பணிகள் தொடரும்.

பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி நிறுவனங்களிலும் மூடநம்பிக்கை தலைதூக்காத வகையில் பாடத் திட்டங்கள் அமைய முயற்சிகள் தொடர வேண்டும்.

****

கேள்வி 4: பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி பற்றி அவதூறாக விமர்சித்த மத்தியப்பிரதேச பா.ஜனதா அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது அமைச்சரின் அநாகரீகப் பேச்சுக்குப் பாடமாக அமையுமா?

– ம.தமிழ்ச்செல்வி, குடியாத்தம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 4: அத்தகையோர் அமைச்சர்களாக நீடிப்பதே ‘தேசிய அவமானம்’ ஆகும்!

****

கேள்வி 5: பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை என்று கூறி இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா?

– ஜெ.ஜனார்த்தனன், வண்டலூர்.

பதில் 5: உலக நாடுகளில் பற்பலவற்றிலும் தஞ்சம் கேட்டு ஏதிலிகள் செல்வது தற்பொழுது வழமைகளில் ஒன்று. இது சத்திரமா என்று கேட்கிறார் – மனிதாபிமான பன்னாட்டு சட்ட நடைமுறைகளையும் மறந்த (அ)நீதிபதி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

****

கேள்வி 6: குஜராத்தில் ஆளும் பா.ஜனதா அரசில் பஞ்சாயத்து மற்றும் வேளாண் துறை அமைச்சராக உள்ள பச்சுபாய் காபத்தின் இரண்டு மகன்களும் 100  நாள் வேலைத்திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நேர்மையாக நடக்குமா என்று சமூகநல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் வினா எழுப்புவது சரியான பார்வையா?

– கெ.குப்பன், மேட்டுக்குப்பம்.

பதில் 6: தி.மு.க. ஆட்சியைப் பார்த்து சதா ஊழல் என்று பேசும் அந்த சத்தியசீலர்கள் – பா.ஜ.க. காவிகளிடம் இச்செய்தியை செவிகளில் அறைந்தது போல மேடைதோறும் சொல்லுங்கள். “மருமகள் உடைத்தால் பொன்குடம் – மாமியார் உடைத்தால் மண்குடம்” – பழமொழியே நினைவுக்கு வருகிறதல்லவா?

****

கேள்வி 7: 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அனைத்து அரசியல் கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பது நடக்கக்கூடிய விடயமா?

– பா.ஆனந்தன், திருவொற்றியூர்.

பதில் 7: அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்ற அரசியல் மேதைதான் இப்படி கூறுகிறார் வெட்கமே இல்லாமல் – நிற்கும் தொகுதியில் வெற்றி பெறுவாரா அவர்?

****

கேள்வி 8: நீதித்துறையோ, நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் கூறியிருப்பதை ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியாளர்களால் ஜீரணிக்க முடியவில்லையே ஏன்?

– ஜெ.பாண்டுரங்கன், வாணுவம்பேட்டை.

பதில் 8: உண்மையைச் சொன்னால் காவிகளால் ஏற்க முடியுமா? காரணம் அவர்கள் கோயபல்ஸின் குருநாதர்கள் ஆயிற்றே!

****

கேள்வி 9: கல்விநிதி ரூ.2,291 கோடியை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  வழக்கு தொடர்ந்திருப்பதற்கு உரிய பலன் கிட்டுமா?

– ஜா.இராஜேஸ்வரி, மேல்மருவத்தூர்.

பதில் 9: நியாயம் நம் பக்கம். சட்டத்தை நம்பி நம்பிக்கையுடன் இருப்போம்!

****

கேள்வி 10: படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மண்சோறு சாப்பிட்டது முட்டாள்தனம் என்று தனது ரசிகர்களை கண்டித்துள்ள நடிகர் சூரி அவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம் அல்லவா?

– க.காமராஜ், கன்னியாகுமரி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 10: :மூடநம்பிக்கை முட்டும் சினிமா உலகத்தில் நடிகர் சூரி போன்றவர்களின் கூற்றுக்கு ஆயிரம் பாராட்டுகள்!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *