22.05.2025 அன்று ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம்
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான ஒரு கட்டமாக அம்ரித் ஸ்டேசன் விக்சித் பாரத் Amrit Stations of VIKSIT BHARAT இந்த திட்டத்தின் கீழ் 103 Amrit Stations புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட விளம்பரம், இந்த புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களால் இது நாட்டின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் இந்தியாவின் வளர்ச்சியுற்ற உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இந்த நிலையங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெரும் என்று எல்லாம் முழங்கினார் மோடி,
நரேந்திரமோடியால் இதே போன்று ஒரு உரையை ஜனவரி மாதம் பல ரயில் நிலையங்களைத் திறந்துவைக்கும் போது உரையாற்றினார்.
ஒன்று அய்தராபாத்தில் உள்ள செவரப்பள்ளி ரயில் நிலையம் மற்றோன்று புதுடில்லி நகரில் உள்ள புதிய அசோக்நகர் நமோ பாரத் ஸ்டேசன். ஆனால் இந்த இரண்டுமே முதல் மழையிலேயே பல் இளித்துவிட்டது.
இத்தனைக்கு இந்தியா முழுவதும் பருவமழை இன்னும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியால் நான்கு மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகப் பாராட்டப்பட்டது. ₹413 கோடி செலவில் நான்கு ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த நிலையம், “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை” வழங்கும் என்று மோடி முழங்கினார்.
ஆனால் ஒற்றை மழைப்பொழிவுக்குப் பிறகு நிலையம் ஒரு “நீர் பூங்காவாக” மாறியது பற்றிய செய்திகளும் படங்களும் மோடியின் உரையை கேலிக்குள்ளாக்கியுள்ளது.
. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் என்று முழங்கிய ரயில் நிலையம், அடிப்படை வானிலை நிலைகளின் முகப்பில் உடனடி தோல்விக்கும் இடையே உள்ள இந்த கடுமையான வேறுபாடு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
கடந்த 11 ஆண்டுகளால் மோடியின் வெற்று முழக்கங்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
செர்லப்பள்ளியில் ரயில் நிலையம் கட்டமைப்பு சிதைவு என்பது தனிப்பட்டதல்ல. பிரதமர் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களைத் தொடர்ந்து திறந்துவைக்கிறார், ஒவ்வொன்றும் “புதிய இந்தியாவின்” சான்றாக முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், மோசமான கட்டுமானம், மோசமான திட்டமிடல் மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லாமை போன்ற தொடர்ச்சியான சிக்கல்கள் இந்த சாதனைகளுக்கு ஒரு நீண்ட நிழலை வீசுகின்றன. நான்கு ஆண்டுகள் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட ஒரு திட்டம், திறந்து வைக்கப்பட்ட 4 மாதங்களுக்குப் பிறகு பெய்த முதல் மழையிலேயே பயணிகள் தங்கும் நவீன அறைகள் உள்ளேயே மழைநீர் அடைமழைபோல் ஊற்றுகிறது.
உலகத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் ரயில் நிலையம், பருவமழையின் முதல் மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜனவரி 5 அன்று சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே 13 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித் தடத்தைத் தொடங்கி வைத்தார். இது ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டமாகும். ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் கோடைகால மழையை மே 19 ஆம் தேதி எதிர்கொண்டது.
எப்போதும் டில்லி கோடை காலமழை என்பது பரந்த சமவெளியான பஞ்சாப் அரியானா பகுதிகளில் வரும் புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை, பெரிய கட்டடங்களில் மேற்பகுதியில் கட்டப்பட்ட தற்காலிக்க் கூடாரங்கள் போன்றவை பாதிக்கப்படும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கையோடு கட்டமைப்புகளை அமைப்பார்கள்
ஆனால், என்ன ஆனது? 19ஆம் தேதி வீசிய புழுதிப்புயல் அதோடு பெய்த மழையால் ரயில் நிலையகூரைகள் காற்றில் பறந்தது. ஒட்டுமொத்த ரயில் நிலையமே எதிரி நாடு குண்டுவீசி தாக்கியது போல் காட்சி அளித்தது. இதற்காக 4600 கோடி செலவழித்தார்கள்.
டில்லியில் கடந்த சனிக்கிழமை (மே 17, 2025) அன்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய புழுதிப் புயல் மற்றும் மழையால், மோடியால் கடந்த ஜனவரியில் திறக்கப்பட்ட நியூ அசோக் நகர் நமோ பாரத் (ரேபிட் ரயில்) நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நியூ அசோக் நகர் நிலையத்திலிருந்து நமோ பாரத் ரயில் சேவைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) பாலம் விமான நிலையத்தில் மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகப் பதிவு செய்துள்ளது.
நியூ அசோக் நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தின் தகரக் கூரை பலத்த காற்றினால் பெயர்ந்து விழுந்தது. இரும்பால் ஆன தூண்களும் சரிந்து விழுந்தன என்று தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துத் கழகம் (NCRTC) தெரிவித்துள்ளது.
அய்தராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி ரயில் நிலையம் ஒரே மழையில் “நீர் பூங்கா” ஆக மாறியது பற்றிய தகவல்கள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தின. தற்போது, நியூ அசோக் நகர் நமோ பாரத் நிலையத்தின் கூரை ஒரு புழுதிப் புயலுக்கு சேதமடைந்துள்ளது, இது நவீன உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமான தரம் மற்றும் பராமரிப்பு குறித்த முக்கியமான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு, “உலகத் தரம் வாய்ந்தது” என்று கூறப்படும் திட்டங்கள், ஒரு சாதாரண இயற்கைப் பேரிடருக்கு கூட தாங்க முடியாமல் போகிறது.
திட்டங்களை விரைவாக நிறைவு செய்து திறந்து வைப்பதில் உள்ள ஆர்வம், அவற்றின் கட்டுமானத் தரம், ஆயுள் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையில் போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை இது உருவாக்குகிறது.
எல்லாதுறைகளிலும் பெரும் ஊழல் நிகழ்ந்து வருவது கண்கூடாகவே தெரியவருகிறது.