புதுடில்லி, மே.22- உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணக் குவியல் சிக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட் டது.
பணக்குவியல்
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யாக பணியாற்றி வந்தார். அப்போது, மார்ச் மாதத்தில், அவரது டில்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு படையினர், ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் சாக்குப்பைகளில் கோடிக் கணக்கான ரூபாய் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நீதிபதி யஷ்வந்த் வர்மா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய உள்மட்ட விசாரணை நடத்த அப்போ தைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். விசார ணையில், பணக்குவியல் சிக்கியது உறுதி செய்யப்பட்டது.
விசாரணை அறிக்கை
தலைமை நீதிபதி உத்தரவிட்டும், நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விலக மறுத்தார். இதனால், விசாரணை அறிக்கை மற்றும் நீதிபதியின் பதில் ஆகியவற்றுடன் குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோருக்கு தலைமை நீதிபதி அறிக்கை அனுப்பினார்.
இதற்கிடையே, நீதிபதியஷ் வந்த் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, வழக்குரைஞர் மேத்யூஸ் நெடும்பரா உள்பட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரிக்க மறுப்பு
இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
நீதிபதிகள் கூறியதாவது:- கடந்த 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்மட்ட விசாரணை அறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தலைமை நீதிபதி அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்கள் நீதிமன்ற ஆணையை கோருவதற்கு முன்பு, உரிய அதிகாரிகள் முன்பு மனு அளித்து, தீர்வு தேட வேண்டி இருக்கும். ஆகவே, இந்த மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. தற்போதைக்கு பிற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.