அச்சப்படுத்தும் கரோனா இந்தியாவில் 257 பேர் பாதிப்பு முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

viduthalai
3 Min Read

புதுடில்லி, மே 22- ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல்:

மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் புதிதாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சமீபத்தில் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் இந்த ஆண்டில் உச்சபட்ச அளவை தொட்டுள்ளது என்று ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மய்யம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து 14,200 ஆக உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப் படுவோர் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் பெரும்பாலும் 30-39 வயதினரிடம் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மே 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 33,030 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16,000 ஆக இருந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகியுள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில்
கட்டுப்பாட்டில் உள்ளது

இந்தியாவில் கரோனா பரவல் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மே 19ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது.

நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொள்ளும்போது இது மிகமிக குறைவு. தவிர, இது சாதாரண பாதிப்புதான். எனவே, மருத்துவமனையில் அனுமதிக்க அவசியம் இல்லை. இருப்பினும், நிலைமையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முகக்கவசம் அணிய
சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உலக சுகாதார நிறுவனம் கடந்த 4ஆம் தேதி வெளிட்ட வாராந்திர கரோனா அறிக்கை யின்படி, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. மேலும், விரீயம் இழந்த ஒமைக்ரான் வைரஸின் உட்பிரிவான ஜேஎன்1 வகை தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவிலும் இந்த ஆண்டில் கரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அறிகுறிகள் உள்ளவர்கள், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சார்ந்த இணைநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *