அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டாம் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 21- அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர, மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவக் கல்வி

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) இணைய வழியில் நடத்துகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஆணையத்தின் செயலர் ராகவ் லங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அங்கீகாரம் அவசியம்

மருத்துவப் படிப்புகளை தொடங்கவும், தொடர்ந்து நடத்தவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் அவசியம். ஆனால், சில கல்லூரிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவதாக தெரிகிறது. அங்கு மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை சட்டப்பூர்வமாக செல்லாது.

இதை மாணவர்கள், பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகம் உரிய அங்கீகாரம் இல்லாமல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தியதால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, வெளிநாடுகளில் எந்த வகையான மருத்துவப் படிப்புகளை படித்தாலும், இந்தியா திரும்பியதும் மருத்துவராக பணியாற்றலாம் என மாணவர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் இந்தியாவில் மருத்துவராக தொடர பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

தகுதி தேர்வு, உள்ளுறை பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய முடியும்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்க, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பதை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணைய தளத்தில் (https://www.nmc.org.in) அறிந்துகொண்டு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டாம். அதுபோன்ற கல்லூரிகள் மருத்துவ படிப்புகளில் சேருமாறு அழைப்பு விடுத்தால், தேசிய மருத்துவ ஆணையத்தின் [email protected] என்ற இமெயில் அல்லது 011-25367033 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *