இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட, பவுத்த மதத்தைச்சேர்ந்த நீதிபதி பி.ஆர். கவாய் மே 14 ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற போதே அம்பேத்கர் அறிமுகப்படுத்திய – பார்ப்பனீயத்தை வீழ்த்தி சமத்துவத்தை நிலைநாட்டிய பிமாகோ ரேகாவ் போர்வெற்றி முழக்கமான ‘ஜெய் பீம்’ என்ற முழக்கத்தை தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் முதல் முதலாக பி.ஆர். கவாய் தமது சொந்த மண்ணான மகாராட்டிரா மாநிலத்திற்குச் சென்றார்.
அங்கு மகாராட்டிரா கோவா பார்கவுன்சில் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கென்று மும்பை சென்றவரை நெறிமுறைப்படி (protocol) அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் வரவேற்கவேண்டும், மேலும் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அம்மாநிலத்தின் மைந்தராக இருப்பினும் அவரை வரவேற்க அரசுமுறையாக யாருமே செல்லவில்லை. இது அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்
இது தொடர்பாக அவர் தனது உரையில் வருத்தத்தோடு மராட்டியில் குறிப்பிட்டதாவது:
‘‘இதோ பாருங்கள், இந்த மண்ணிற்கான மைந்தன் தலைமை நீதிபதியாகி முதல் முறையாக எனது மண்ணிற்கு வந்திருக்கிறேன். பொதுவாக ஒரு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி வருகை புரிந்தால் நெறிமுறை (Protocol) விதிப்படி மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இங்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. உயர்பதவியில் உள்ளவர்களின் மனம் குறுகியதாக இருக்கும் போது, அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகளை குற்றம் சொல்வதில் பயனில்லை’’ என்று கூறினார்.
மகாராட்டிராவின் முதலமைச்சரான பார்ப்பனர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவின் பேரில் தான் இவ்வாறு நடந்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தலைமை நீதிபதியே ஆனாலும், அவர் மராட்டியராக இருந்த போதிலும் அவரை அவமானப்படுத்திய நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி வந்தது முதல் – அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கையை எல்லா வகையிலும் அரங்கேற்றுவதில் முனைப்புக் காட்டி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். என்பது வருணாசிரமத்தைக் காப்பாற்றும் பார்ப்பனீயக் கொள்கையைத் தன் மடியில் வைத்துப் பத்திரமாகக் காப்பாற்றக் கூடியதாகும். அவர்களின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தனது ‘ஞான கங்கை’ (Bunch of Thoughts) நூலில் வருணாசிரமத்தை வலியுறுத்தி வரிந்துக் கட்டிக் கொண்டு எழுதித் தள்ளியிருக்கிறார்.
சங்கர மடத்துக்குச் சென்றாலும் உயர் பதவி வகிக்கும் பார்ப்பனரல்லாதார் தரையில்தான் உட்கார முடியும்!
ஏன் வெகு தூரம் போவானேன்? இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கும் சரி, நாடாளு மன்ற திறப்பு விழாவிற்கும் சரி குறைந்தபட்சம் அழைப்பிதழ் கூடக் கொடுக்கப்படவில்லையே!
அயோத்தியில் இராமன் கோயில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு, திறப்பு விழா நிகழ்ச்சிக்குகூட அழைப்பு இல்லையே!
பட்டியலின மக்களின் வாக்கு வேண்டும் என்பதற்காக ‘‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா? ஒரு பழங்குடி இனப் பெண்ணைக் குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம்!’’ என்று அவர்களுக்கே உரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் – அதுவும் புத்தமார்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக சொந்த மண்ணான மகாராட்டிரத் திலேயே அவரை அவமதித்துள்ளனர் – அவரும் மனம் புழுங்கிக் கண்ணீர் மல்கத் தன் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்!
நாட்டிலே நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல – பாசிச மதவாத ஆட்சி என்பதை மறந்து விடாதீர்! மறந்து விடாதீர்!!