சென்னை, மே 18- தமிழ் நாட்டில் பொது விநியோக திட்டத்தில் பயன்பெறவும், நலத் திட்டங்களை பெறவும் குடும்ப அட்டை மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப் படும் குடும்ப அட்டை மூலமாக தான் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற நலத் திட்டங்களை மக்கள் பெற முடிகிறது.
மேலும் குடும்பங்கள் குறித்த விவரங்களை அரசு சரிபார்த்து, திட்டங்களை செயல்படுத்தவும், குடும்ப அட்டை முக்கியமானதாக அமைகிறது.
இந்த குடும்ப அட்டையை வீட்டில் இருந்த படியே விண்ணப் பிக்கவும், திருத்தங்கள் செய்யவும் அரசு அனுமதிக்கிறது.
தமிழ்நாட்டில், 2.26 கோடி குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இதில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., குடும்ப அட்டைகளில் 3 கோடியே 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
எனினும், இதில் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்களின் பெயரை, கார்டுகளில் இருந்து குடும்பத்தினர் நீக்காமல் உள்ளனர்.
எனவே, பி.எச்.எச்., மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள உறுப் பினர் விவரங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், நியாய விலைக் கடை களில் உள்ள விற்பனை கருவி மூலமாக குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, ஆதார் சரிபார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு இந்தப் பணி தொடங் கியது.
இந்தப் பணியை கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்னும், 40 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை என்பதால், அவர்கள் வரும் 31ஆம் தேதி வரை விரல்ரேகை பதிவு செய்ய தற்போது அவகாசம் தரப் பட்டுள்ளது.
மேலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் வெளியே பணிபுரிந்து கைரேகை வைக்க முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலத்தில் அய்.எம்.பி.டி.எஸ்., அல்லது e-KYC மூலம் மே 31ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்ய முடியும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.