உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
பாடம் 6
இரவு என்பது நாளின் முடிவல்ல…நாளையின் தொடக்கம்
ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க இந்திய ஒன்றிய அரசு தீவிரம் காட்டியது.அந்த முயற்சியை முறியடிக்கவும் தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய கல்வி்க்கான நிதியைப் பெறுவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடுமையான போராட்டத்தில் இறங்கினார். முதலமைச்சரின் முடிவுக்கு ஆதரவாக தமிழ்நாடு மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநில கட்சிகளும், உலகம் முழுவதும் கல்வியால் உயர்ந்த நிலையை எட்டிய தமிழர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினார்கள்.
இந்த சூழ்நிலையில் சிட்னியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் முடிந்தபிறகு தோழர் தேவிபாலா பார்வையாளர்களை நோக்கி “ இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழித் திணிப்பை எதிர்த்தும் முழக்கம் எழுப்பப் போகிறோம். விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் “ என்று அழைப்பு விடுத்தார். உடனடியாக பார்வையாளர்களில் பலர் முழக்கம் எழுப்ப இணைந்து கொண்டனர்.
வேண்டாம் வேண்டாம் மும்மொழி வேண்டாம்!!
உலகை வெல்ல இருமொழி இருக்க,
மும்மொழி என்னும் தொல்லை எதற்கு !!
இந்தித் திணிப்பை என்றும் எதிர்பபோம் !,
என்னும் முழக்கங்களை எழுப்பினர்.
இயல்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்ற இந்த மும்மொழி எதிர்ப்பு முழக்கம் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்நிகழ்வின் மூலம் எங்கள் ஆஸ்திரேலியப் பயணம் தமிழ்நாட்டிலும் விளம்பரமாகிவிட்டது .
சிட்னி நிகழ்ச்சிக்குவந்திருந்த பார்வையாளர்கள் தங்களை ஆசிரியரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு அன்புடன் உரையாடினர். ஆசிரியருடன் நீண்டநாள் நட்பு கொண்டவரான ஈழத் தமிழர் மறவன்புலவு ச்ச்சிதானந்தன் அவர்களது மகளும் மருமகனும் ஆசிரியரை சந்தித்து நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.சிட்னி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே குலசேகரம் செல்லையா என்ற பத்திரிகையாளர் ஆசிரியரை 47 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் சந்தித்து பேட்டி எடுத்ததை நினைவூட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மல்லிகா என்ற சகோதரி மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இறுதியில் ஆசிரியரை சந்தித்து கண்கள் கலங்க உணர்ச்சி மயமாக உரையாடினார்.என்னிடமும் மனம் நெகிழ தன் அன்பைத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் ஆசிரியரின் முதல் நிகழ்சசி இவ்வாறு வெற்றிகரமாகவும் மனநிறைவுடனும் நிறைவேறியது. வழக்கம்போல தாமதமான இரவு உணவை முடித்து ஆசிரியர் அறைக்கு உறங்கச் சென்ற போது மீண்டும் மணி பதினொன்றைத் தாண்டியது. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை : ஆகவே நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ஏனெனில் காலை 8 மணிக்கு விமானம் மூலம் பிரிஸ்பேன் செல்லவேண்டும். அடுத்தநாள் ஞாயிறு 16.3.2025 அன்று பிரிஸ்பேனில் கூட்டம். அதிகாலையில் எழுந்து கிளம்ப வேண்டும் என்ற நினைவுகளோடு ஆசிரியரிடம் விடைபெற்றோம். அப்போழுது ஆசிரியர் சிட்னி நிகழ்ச்சி சரியாக நடந்து முடிந்து விட்டது. நாளை பிரிஸ்பேன் நிகழ்ச்சிக்கு யார் சிறப்பு அழைப்பாளர்கள். ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வருகிறார்களா என்று கேட்டார். ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்த மகிழ்ச்சியில் திளைத்து விடாமல் அடுத்த நாள் நிகழ்ச்சி பற்றி உடனே சிந்திக்கத் தொடங்குகிறார் என்பதை ஒவ்வொரு நாள் முடிவும் உணர்த்தியது.
மறுநாள் காலை சிட்னி விமான நிலையத்தில் இருந்து 8 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் நானும், அண்ணாமலை மகிழ்நன்,இராணி,புவனா ஆகியோர் புறப்பட்டு பிரிஸ்பேன் சென்றோம். ஆசிரியரும் தோழர் கபிலனும் 9 மணி விமானத்தில் புறப்பட்டார்கள். அவர்களை தோழர்கள் அஞ்சப்பர் தாமோதரன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் சிட்னி விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.
பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர்களான பார்த்திபன், முகுந்தராஜ் சுப்ரமணியம், முனைவர் பிரதீப், ஆகியோருடன் பார்த்திபன் இணையர் மாமதி, அவர்களின் மகள் நிலா, சிறைத்துறை அதிகாரி இரவிச்சந்திரன் அவர் இணையர் சாரதா அம்மையார், தோழர் கார்த்திக் குமார் அவர் இணையர் பத்மா, அவர்களின் மகள் ஆதியா, தோழர் கார்த்திகேயன் நாராயணன் அவர் மகள் தான்யா ஆகியோர் குடும்பத்துடன் வந்து அளவற்ற மகிழ்வுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம் பிரிஸ்பேன். ஆரவாரமற்ற நகரம். ஊருக்கு நடுவில் ஒரு ஆறு ஓடுகிறது. நகரின் மய்யத்தில் ஆற்றின் ஒரு கரையில் மக்கள் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்வதற் கேற்ற சாலையோர நடை பாதையும், ஆற்றின் உள் கரையில் சரிந்து இறங்கும் புல்தரையும் சமவெளியுமாக இருக்கும். ஆற்றங்கரையில் நடந்தால் தூய்மையான காற்று நம் உடலை நிரப்பும். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள்.
பிரிஸ்பேன் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்ற கேள்வி மார்ச் 10 ஆம் தேதிவரையில் எல்லோருக்கும் இருந்தது. ஏனெனில் பிப்ரவரி மாத இறுதியில் பிரிஸ்பேனில் பெருமழை பெய்யத் தொடங்கியது. மார்ச் முதல்வாரத்தில் புயல் வீசியது. எனவே பொதுநிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருக்காது என்ற நிலை இருந்தது. ஆயினும் மார்ச் பத்தாம்தேதிக்குப் பிறகு ஓரளவு சூழல் இயல்பு நிலைக்கு வந்தது. ஒரே வாரத்தில் அன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோழர் பார்த்திபன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தோழர் முகுந்தராஜ் தகவல் தோழில் நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இ. கலப்பை என்ற எழுத்துருவை உருவாக்கி இணைய உலகில் புகழ் பெற்றவர். தோழர் முனைவர் பிரதீப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் (Guide) இருக்கிறார். தோழர் கார்த்திகேயன் நாராயணன் மருத்துவமனையில் இதயவியல் துறை செவிலியராக (Nurse) பணியாற்றுகிறார். தோழர் கார்த்திக் குமார் ஊடகத் துறையில் செயல்படுகிறார். இத்தகைய அவர்களது பணிகளுக்கிடையில் குறைந்த காலத்தில் மிகச் சிறப்பாக பிரிஸ்பேன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து நேராக முனைவர் கண்ணப்பன் அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்ணபிரான் அவர்களது இல்லமே சிறு விவசாயக் கல்லூரி போல இருந்தது. வீட்டின் பின்புறத்தில் பழமரங்களுடன் கரும்பு பயிர்செய்திருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணபிரான் அவர்களும் அவரது இணையரும் எங்களுக்கு அறுசுவை உணவை அன்போடு பரிமாறினார்கள். ஆசிரியர் அவர்கள் கண்ணபிரான் அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்து அவரது பணி தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இனிய உணவிற்குப் பின் நாங்கள் தங்கவேண்டிய உணவு விடுதிக்குச் சென்றோம்.
விமான நிலையத்தில் இருந்து நாங்கள் தங்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றவர் சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் இரவிச்சந்திரன். பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழியக்க ஆர்வலர், கவிஞர் என பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது இணையர் சாரதா அம்மையார் பிரிஸ்பேன் தமிழ்ச்சங்கத்தில் செயலாற்றுபவர். மாலை நிகழ்வுக்கும் அவரே எங்களை அழைத்துச் சென்றார்.
Brisbane Underwood Park Community Centre என்ற இடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லேசான தூறலும் இருந்தது.
(தொடரும்)
திருத்தம்: நேற்று (15.5.2025) கட்டுரையின் முதல் பத்தி முதல் வரியில் தேதி 5.3.2025 என்று தவறு தலாக அச்சாகியுள்ளது.15.3.2025 என்று திருத்தி
வாசிக்கவும். (ஆ–ர்)