சென்னை, மே 14- பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்படுவதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், குன்றத்தூரைச் சேர்ந்த அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவர் பாண்டியராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம்தான். வழிபாடுகளில் ஜாதி இருக்கக்கூடாது என்று ஏற்கெனவே இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்தக் கோவில் பிரம்மோற்சவத்துக்கு அனைத்து ஜாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெறலாம் என்று உத்தரவிட்டார்.