அமெரிக்காவில் தமிழின் எதிர்காலம்

viduthalai
2 Min Read

அமெரிக்காவில் தமிழ் இருக்குமா என்ற கேள்வி எங்களில் பலருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் பெரிய கேள்வியாக இருந்தது.
அதற்கான விடையாக மே 10ஆம் தேதி சிகாகோ தமிழ்ப் பள்ளிகள் ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்று நடந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் கூட இப்படி நடக்குமா என்ற அளவிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

ஆரம்பத்தில் வந்திருந்த அத்தனைக் குழந்தைகளும் மேடையில் ஏறி திருக்குறள், ஆத்திச்சூடி சொன்னார்கள். பின்னர் அவர்கள் அனைவரும், அரங்கத்தில் இருந்தவர்களும் தமிழ் வாழ்த்துப் பாடினோம் .

குழந்தைகள் நிகழ்ச்சிகள் தொடங்கின.சுழலும் சொற் போர் நடந்தது. ஒரு குழந்தை சொன்ன சொல் முடியும் எழுத்திலிருந்து அடுத்தக் குழந்தை ஒரு சொல் சொல்ல வேண்டும் . சொன்ன வார்த்தை திரும்பச் சொல்லக் கூடாது!. குழந்தைகள் சிறப்பான சொற்கள் சொன்னபோது அரங்கமே கைதட்டிப் பாராட்டினோம்.
புரட்சிக் கவிஞரின் புரட்சிக்கவி நாடகம் மிகவும் சிறப்பாக அரங்கேறியது. குருடன் என்று நினைக்கப் பட்ட உதாரன் “ நீலவான ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைப்” பாடல் பாடியதும் அமுதவல்லி திரையை விலக்கிப் பார்த்து் அவன் குருடன் இல்லை என அறிவதும், அந்த அழகுப் பெண் தொழு நோயாளி அல்ல என்பதும் மிகவும் அற்புதமாக நடித்து மன்னனின் சூழ்ச்சியை அறியவைத்து இருவரும் கொலைக்களத்திலிருந்து மக்களால் காப்பாற்றப்படும் காட்சிகளை இங்கு பிறந்த குழந்தைகள் இவ்வளவு அருமையாக நடித்ததைப் பாராட்டி மகிழ்ந்தோம்.
பேச்சுப் போட்டிகளின் தலைப்புகளே சிறப்பு.
“முதற் சங்கம்” “ இடைச்சங்கம்” “கடைச் சங்கம்”

இந்தியா

பெரியவர்கள் கூடப் பேச முடியாத அளவிற்கு மேற்கோள்கள் காட்டிப் பெருமைகளை அழகுத் தமிழில் பேசிய போது எப்படி மதிப்பெண்கள் தருவது என்று தடுமாறினோம். அனைவருக்குமே முதல் பரிசு தர வேண்டும் போல் பேசினார்கள்.

நாள் முழுதும் திருக்குறள்கள் நூற்றுக் கணக்குகளில் ஒப்பித்தோர் . சிறப்பாக மிகுதியாக சொன்னவர்களுக்கு வயதுப் பட பரிசுகள் என்று அனைத்தும் சிறப்பான ஏற்பாடுகள். தமிழ்ப்பள்ளிகளே தனது வாழ்க்கை என்று நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தொடர்ந்து பணி செய்துவரும் சிகாகோ பாபு அவர்களும், அவருக்குத் துணையாகப் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஆசிரியப் பெருமக்களும் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டி யவர்கள்.

சிகாகோ பள்ளி மாணவர்களின் தரம் கண்டு தலை பெருமிதத்தால் நிமிர்ந்து நின்றது. கொள்கைப் பிடிப்பு தனி முத்திரை பதித்தது!
அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள் இல்லாத நகரங்களே இல்லை என்றளவிற்கு இன்று ஆயிரக்கணக்கான மாண வர்கள் தமிழ் கற்று வருவது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் உச்சரிப்பு, சொற்களை பயன்படுத்துதல், பேச்சுத்திறமை என்று மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
ஒளிமயமான தமிழுக்கு எதிர் காலம் அமெரிக்காவில் உண்டு என்பது திண்ணம்!

– சோம. இளங்கோவன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *