பக்தி படுத்தும் பாடு

viduthalai
2 Min Read

கோயில் விழாவில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை

கரூர், மே. 7- கோவில் விழாவில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய் யப்பட்டார்.

ஊர்வலத்தில் தகராறு

கரூர் மாவட்டம், குளித் தலையில் உள்ள மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 4.5.2025 அன்று கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அன்று இரவு குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பூக்களை வைத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதே போல் குளித்தலை கொல்லம் பட்டறை தெரு பகுதியில் இருந்து பூக்களை ஊர்வலமாககொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வாலிபர்கள் சிலர் நடனம் ஆடிக்கொண்டு ஊர்வலத்திற்கு இடையூறாக சென்றுள்ளனர். இதனால் பூக்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துடன் வந்த குளித்தலை கொல்லம் பட்டறை தெரு பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 21), அவரது தம்பி சியாம் சுந்தர் (18), தாமோதரன் (24), வசந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நடனம் ஆடியபடி வந்தவர்களிடம் தட்டிக் கேட்டனர். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த குளித்தலை சேதுரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்த நாகேந்திரன் (21) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சியாம் சுந்தரை குத்தினார். இதை தடுக்கச் சென்ற தாமோதரன், வசந்த் ஆகிய 2 பேரையும் குத்தி உள்ளார். இந்த கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித் தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சியாம் சுந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாமோதரன், வசந்த் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகேந் திரன், லோகேஸ்வரன் (21), ராமு (20), முஸ்தபா (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மோகன் (18) என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சியாம் சுந்தர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது பொதுத்தேர்வு எழுதி இருந்தார். நாகேந்திரன் கடந்த ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் குளித்தலை அனைத்து மகளிர் அரசு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *