முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும்

2 Min Read

கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, மே 7 முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை 2 வாரத்தில் கேரளா செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை

பராமரிப்பு பணி மேற்கொள்ள கேரளா அனுமதிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று (6.5.2025) நடைபெற்றது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையில், அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள வழக்குரைஞரின் கருத்து நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் விவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசு வாதம்: தொடர்ச்சியாக இவ்விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறுகிறது. எனினும், அதை செயல்படுத்த கேரள அரசு முட்டுக் கட்டை போடுகிறது.அணையை பராமரிக்க மரங்களை அகற்ற முதலில் அனுமதி அளித்த கேரளா, பின்னர் மறுத்தது. புதிய அணை கட்ட வேண்டும் என கூறி வரும் கேரளா, பராமரிப்புக்கு அனுமதி மறுக்கிறது. உச்சநீதிமன்றம் 2006இல் பிறப்பித்த உத்தரவுப்படி பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கேரளத் தரப்பு வாதம்: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. ஆகவே இந்த விவகாரத்தில் முடிவுக்கு வர புதிய ஆணை ஒன்றே தீர்வு

அனுமதிக்க வேண்டும்

நீதிபதிகள்: “அணை பாதுகாப்பு குறைபாடாக உள்ளது என தொடர்ந்து கூறும் நீங்கள், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது இல்லை. முதலில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குங்கள்.புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வேறு விவகாரம், தற்போது அணை பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.

கேரள அரசு: “தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை அணையை பராமரிக்க விருப்பம் காட்டவில்லை. நீர் மட்டத்தை உயர்த்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்”

நீதிபதிகள்: “பொதுவான குற்றச் சாட்டாக வைக்கிறீர்கள். தமிழ்நாடு அரசு எங்கே அப்படி தெரிவித்தது என்பதை காட்டுங்கள்”  முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கையை, அணையின் மேற்பார்வை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மேற்பார்வை குழு பரிசீலிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும்.

2 வாரத்தில்

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ஆம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும். அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரையை 2 வாரத்தில் செயல்படுத்த ஆணையிடுகிறோம். 1000 ஆண்டு கட்டுமானங்களே பாதுகாப்பாக உள்ளதால் அணை பாதுகாப்பு குறித்து அச்சம் வேண்டாம். மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்தியது குறித்து 2 மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்து. வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *