பேராசிரியர் தொ.பரமசிவன்
பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் தமிழறிஞர், திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர், மானிடவியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரியலை அடிப் படையாகக் கொண்டு திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தியவை.
தமிழர்கள் தொலைத்த ‘பண்பாட்டு வேர்களை’ தன் கட்டுரைகள் வாயிலாக மீட்டெடுத்தவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலான ‘அழகர் கோயில்’ வழக்கமான கோவில் ஆய்வு நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு சமூகவியலை பேசி புதிய ஆய்வு முறை களுக்கு முன்னோடி யாக விளங்குகிறது.
அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், நாள் மலர்கள், மானுட வாசிப்பு, பாளையங் கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
தந்தை பெரியார் தமிழ்த் தொன்மங்களை எதிர்த்தார். கடவுள்களை. எதிர்த்தார் என்கின்ற தட்டையான, போலியான வாதங்களை நிராகரித்து பெரியாரை தமிழ்ச் சமூகம் எப்படி பார்க்க வேண்டும் என சொல்லித்தந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன். வாழ்நாளெல்லாம் தந்தை பெரியாரை கொண்டாடியவர் – தந்தை பெரியாரின் நினைவு நாளிலேயே தன் வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டு நம்மிடமிருந்து பிரிந்திருக்கிறார். தன் அறிவுலக ஆசான் பெரியாரைப் பற்றி அவரே சொல்லக் கேட்போம்.
பெரியார் தனது போராட்டத்தை தொடங்கும் போது அவரைப் பின்பற்றிச் சிந்திக்கக் கூடிய எளிய மனிதர்கள் இருக்கவில்லை. இன்றைக்கு மிகக் கூர்மையான சிந்தனையுடன் எளிய மக்களிடமிருந்து தோன்றிய பெரியாரிய வாதிகள் இருக்கிறார்கள். இன்னும் சில இழப்புகளுக்கு பிறகு பெரியாருக்குத் திரும்புவதைத் தவிர தமிழருக்கு வேறு வழி இல்லை என்று நான் நினைக்கின்றேன்.
தமிழ்தேசியம் குறித்துப் பெரியார் பேசும் போது தேசியம் வேறு ஜாதி விடுதலை வேறு என்று பேசவில்லை. இவை இரண்டையுமே அவர் அருகருகாக வைத்தே பேசினார். அதைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டுதான் “ஜாதி களைந்திடல் ஒன்று, நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று” என்ற இரு கடமைகளை முன்னிறுத்தி பாரதிதாசன் பாடுகிறார். ஜாதீய விடுதலையைத் தள்ளி வைத்து விட்டுத் தமிழ்தேசிய விடுதலையோ, தேசிய விடுதலையைத் தள்ளி வைத்து விட்டுச் ஜாதிய விடுதலையோ சாத்தியமற்றது என்பது தான் பெரியாரின் கருத்து. எனவே, இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கின்றேன். பெரியார் இலட்சியங்களில் தெளிவாய் இருந்தார் அதற்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார். தேசாபிமானத்தைக் கண்டிக்க வேண்டிய வேளையில் அவர்தான் கண்டித்தார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்றும் அவர்தான் முதலில் சொன்னார். பெரியார் தன் பொது வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார் “இந்த நேரத்தில் இந்த பணி அவசியமாக இருப்பதாலும் இதைச் செய்ய வேறு யாரும் முன்வராததாலும் எனக்கு இதைத் தவிர வேறு பற்றுகள் இல்லாத காரணத்தாலும் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறேன்” என்கிறார். அவர் பற்றற்றவர் அவர் புத்தகங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டவரல்லர். அவர் தனது கடைசிக் காலம் வரை தீரா வாசிப்புப் பழக்கம் உடையவராய் இருந்த போதிலும் அவர் பாடங்களை நிகழ்வுகளிலிருந்து கற்றுக் கொண்டவர். அவர் அனுபவங்களின் மாணவர் – தனது விடுதலை இலட்சியங்களை அடைவதற்காக எது வேண்டுமானலும் செய்யக் கூடியவர் பெரியார்.
நம்முடைய தமிழ் மரபுக்குள்ளே ஒரு கலக மரபு இருக்கிறது. இந்த கலக மரபுகள் நமது இன்றைய கருத்தியல் போராட்டங்களுக்கு ஆதாரமாக நிற்கின்றன. பெரியாரோடு சிந்தனை நின்று விடவில்லையே! பெரியாரைத் தொடர்ந்தும் நாம் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறோம். நம்மை பெரியார்சிந்திக்க வைக்கிறார்.
பெரியார் ஒரு கலகமரபுச் சிந்தனையாளர். அவர் நீதிமன்றங்களில் பேசியதைக் கவனித்தாலே அவற்றைப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக நாடு விடுதலை பெற்ற பிறகு அவர் தமிழ் மக்களின் பெரும் தலைவர் ஆனதன் பிறகுகூட கிட்டத்தட்ட அவருடைய எழுபத்து நான்காவது வயதிலே “நான் அப்படித்தான் அய்யா சொன்னேன் அதுதான் நியாமென்று இப்போதும் கருதுகிறேன். என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ கொடுங்கள்” என்று திருச்சி நீதிமன்றத்திலே மாவட்ட ஆட்சித்தலைவர் மலையப்பன் வழக்கிலே பெரியார் சொன்னார்.
பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்தத் தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே ! மறைமலை அடிகளோ, மு. இராகவய்யங்காரோ செய்யவில்லையே? உரைநடை என்பது மணிக் கொடியால் தான் வளர்ந்தது என்று வேத வசனம் மாதிரி சொல்கிறார்கள். ஆனால், 1925 இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்க வேண்டும். அவரின் உரைநடை அத்தனை அற்புதமாக இருக்கிறது. பாரதியைக் கூட விட்டு விடுகிறார்கள். இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தை தக்கவைக்கிற முயற்சிகள் தான்.
பெரியாரைக் கொண்டாடுவது அறிவுலகத்துக்கு அடையாளம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. மார்க்சியவாதிகளும் பெரியாரைக் கொண்டாடினார்கள். “பகுத்தறிவின் சிகரம். பெரியார்” என்று சொல்லி 1954 இல் தொழிற்சங்கத் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் புத்தகம் எழுதினார். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஓர் அடையாளம் என்று கருதப்பட்டது போல, பெரியாரைப் பழிப்பது இப்போது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆக்கப்பட்டுவிட்டது.
பெரியார் மீதான விமர்சனங்களை பெரியாரின் ஆளுமை இன்னும் ஒரு நூற்றாண்டிற்குத் தாங்கும்.
ஜாதிப் பெயர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை. மற்ற மாநிலங்களில் ஜாதிப் பெயர் துறந்து யாருமில்லை நாம் தான் மூன்று தலைமுறைகளாக ஜாதிப் பெயர் துறந்து இருக்கிறோம். இது பெரியாராலே தான் சாத்திய மாயிற்று.
பெரியாரின் கொள்கைகள் ஒருபோதும் சாகாது. மானுட விடுதலை ஒன்றுதான் பெரியாரின் நோக்கம். அதற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் அவர் எதிர்த்தார். அதனால் யாரெல்லாம் மானுட விடுதலையை முன்னெடுக்கிறார்களோ.அவர்களுக்கெல்லாம் பெரியாரிடம் கற்றுக் கொள்ள விசயங்கள் உண்டு. அவரின் பல கோட்பாடுகள் அதிரடியானவைதாம். ஆனால் அவை அந்த காலத்தின் தேவையால் உருவானவை.
பெரியார், அம்பேத்கர் என்ற கட்டுமானம் பார்ப்பனியத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால் பெரியார், அம்பேத்கர் என்ற பைண்டிங்கில் பெரியாரை உடைப்பது என்ற வேலையையும் செய்து வருகின்றனர். அம்பேத்கரை பெரியாரிடமிருந்து தனிமைப்படுத்தினால் வேலை சுலபம் ஆகும் என்று நினைக்கின்றனர். அது அத்தனை சுலபம் அல்ல. யார் பெரியாரை எதிர்க்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோமென்றால் பெரியாரின் வெற்றி புலப்படும். (தொகுப்பு: இரா.ராஜா)