தேஜஸ்வி வலியுறுத்தல்
பாட்னா, மே 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட மற்றும் சவாலான பயணத்தின் முதல் அடியே என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சமீபத்தில் ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் நடத்த முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள தேஜஸ்வி, இந்த நடவடிக்கை சமூக நீதியை அடைவதில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வெறும் தரவுகளைச் சேகரிப்பது மட்டும் போதாது என்றும், அந்தத் தரவுகளை சமூக நீதிக்கான விரிவான சீர்திருத்தங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மை நிலையை வெளிக்கொணர்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புதான் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவத்தையும், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரின் எண்ணிக்கையையும் சரியாக வெளிச்சம் போட்டுக் காட்டும். பீகாரில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கணக்கெடுப்பு, மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs) மாநில மக்கள் தொகையில் சுமார் 63% உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது போல, தேசிய அளவிலான தரவுகள் பல நீண்டகால கருத்துகளை உடைக்கும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் மறுஆய்வு
கணக்கெடுப்புத் தரவுகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை விரிவாக மறுஆய்வு செய்ய வழிவகுக்க வேண்டும். இட ஒதுக்கீடுகளுக்கான தற்போதுள்ள “தன்னிச்சையான வரம்பு” மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
விகிதாசார பிரதிநிதித்துவம்
வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணிகளில் ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி, விளிம்புநிலை குழுக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
தனியார் துறையில் சமூக நீதி
பொது வளங்களிலிருந்து கணிசமான பலன்களைப் பெறும் தனியார் துறையும் சமூக நீதிக் கொள்கைகளிலிருந்து விலகி இருக்க முடியாது. நிறுவனங்களின் அனைத்து மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பது முற்றிலும் நியாயமானது.
முறையான சீர்திருத்தங்களுக்கான வினையூக்கி
ஜாதிவாரி கணக்கெடுப்பு வெறும் தரவு சேகரிப்புடன் நின்றுவிடாமல், முறையான சீர்திருத்தங்களுக்கான வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். கடந்த கால ஆணைய அறிக்கைகளைப் போல இந்தத் தரவுகளும் வெறும் ஆவணங்களாக முடங்கிவிடக் கூடாது.
பீகாரில் தங்கள் ஆட்சியின் போது ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த எடுத்த முயற்சிகளுக்கு ஒன்றிய அரசும், சில தரப்பினரும் தடைகளை ஏற்படுத்தியதை தேஜஸ்வி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பல ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பு “பிரிவினைவாதம்” என்று புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு, நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட குடிமக்களின் கோரிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவத்தை நோக்கிய…
இந்த முடிவு சமத்துவத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்” என்று குறிப்பிட்ட தேஜஸ்வி, இந்த கணக்கெடுப்புக்காகப் போராடிய லட்சக்கணக்கானோர் வெறும் தரவுகளை மட்டுமல்ல, கண்ணியத்தையும் அதிகாரமளித்தலையும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். உண்மையான சமூக மாற்றத்திற்காக கணக்கெடுப்பு முடிவுகளைப் பயன்படுத்துவதில் பீகார் அரசு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தேஜஸ்வி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.